×

கஜா புயலின் கோரதாண்டவத்தால் விசைப்படகுகள் முழுமையாக சேதம் 18 நாட்களாக தவிக்கும் மீனவர்கள்

சேதுபாவாசத்திரம், டிச.5: கஜா புயலின் கோரதாண்டவத்தால் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த விசைப்படகுகள் முழுமையாக சேதமடைந்தது. இதனால் வேலையின்றி 18 நாட்களாக மீனவர்கள் தவித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் 246 விசைப்படகுகள் இருந்தன. விசைப்படகுகளுக்கு என்று சேதுபாவாசத்திரம் மற்றும் மல்லிப்பட்டினம் பகுதிகளில் மட்டுமே மீன்பிடி துறைமுகங்கள் உள்ளது.

தற்போது மல்லிப்பட்டினத்தில் ரூ.66 கோடியில் துறைமுகம் விரிவாக்க பணிகள் நடந்து வந்தது. திங்கள், புதன், சனிக்கிழமைகளில் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து விட்டு மற்ற நாட்களில் துறைமுகங்களில் தங்கள் விசைப்படகுகளை மீனவர்கள் நிறுத்தி வைத்திருப்பர். கஜா புயலின் கோரதாண்டவத்தால் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த விசைப்படகுகள் சேதமடைந்தது. இதனால் கடந்த 18 நாட்களாக மீனவ குடும்பங்கள் செய்வதறியாது சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். புதிய படகு தயார் செய்வதென்றால் 6 மாதமாகும். மீன்பிடி தொழிலுக்கு எப்போது செல்வோம் என்றே தெரியவில்லையென விசைப்படகு மீனவர்கள் கூறுகின்றனர். தற்போது வரை மீன்பிடி துறைமுகங்களை பார்க்கும்போது நெஞ்சை பதற வைக்கும் காட்சியாகவே உள்ளது.

Tags : firing ,storm ,Gaia ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...