×

செந்துறை பகுதிகளில் பருத்தி பயிரில் நோய் தாக்குதல் வேளாண் சிறப்பு குழுவினர் ஆய்வு

செந்துறை, டிச.5:  செந்துறை பகுதிகளில் பருத்தி பயிரில் நோய் தாக்குதல் குறித்து வேளாண் சிறப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அரியலூர் மாவட்டத்தில், பருத்தி பயிர் சராசரியாக 9,180 ஹெக்டேரில் மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. வீரிய ரக பருத்தியாக ஆகஸ்ட், செப்டம்பர் வரையிலும், சாகுபடி செய்துள்ளனர். இப்பயிரில் தற்போது ஆல்ட்டர் நேரிய இலைப்புள்ளி நோய் தாக்குதல் அதிகளவில் தென்படுகிறது. இந்த நோய் தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன்(பொ), வேளாண் துணை இயக்குநர் பழனிசாமி, வேளாண் உதவி இயக்குநர் நாகராஜன், வேப்பந்தட்டை பருத்தி ஆராய்சி நிலைய ஆராய்ச்சியாளர் கணபதி மற்றும் வேளாண் அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக்குழு செந்துறை வட்டாரத்தில் குழுமூர், சன்னாசி நல்லூரிலுள்ள பருத்தி வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நோயானது காற்றில் ஈரப்பதம் அதிகம் இருக்கும்போது வேகமாக பரவும் தன்மைகொண்டது. முதலில் இலைகள் மேல்புள்ளிகள் தோன்றும். பின்னர் காய்களிலும் பரவி மகசூல் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நோய் தாக்குதலை கட்டுப்படுத்த, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பருத்தி பயிருடன் ஊடுபயிர் அல்லது வரப்புப்பயிராக ஆமணக்கு, மற்றும் பயறு வகை பயிர்களான உளுந்து, துவரை போன்ற பயிர்களை பயிரிட வேண்டும். பருத்தி பயிரிடப்படும் முன் ஏற்கனவே பயிரிடப்பட்ட பயிர் கழிவுகள் அகற்றிய பின் பருத்தி நடவு செய்யவேண்டும். வயல்களை சுற்றிலும் களைகள் இல்லாமல் மேலாண்மை செய்ய வேண்டும்.    பொட்டாசியம் நைட்ரேட் 1 கிலோ, புரபிகோனோசெல் (டில்ட்) 250மி.லி, ஒட்டும் திரவம் 50மி.லி ஒரு ஏக்கர் என்ற அளவிலும் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் வயல்களில் தெளிக்க வேண்டும்.

 இதுபோன்ற  வழிமுறைகளை பின்பற்றி ஆல்ட்டர் நேரிய இலைப்புள்ளி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறை ஆய்வு குழுவால் துண்டுபிரசுரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், அரியலூர் வேளாண் அலுவலர்  (தரக்கட்டுப்பாடு) ஆகியோர் கலந்துகொண்டனர். ஆய்வின் முடிவில், இந்நோய்தாக்குதல் தென்பட்டால், உடன் அருகிலுள்ள கிரீடு வேளாண் அறிவியல் நிலையத்தையோ வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு. இவ்வாறு ஆய்வு மேற்கொண்ட வேளாண் ஆய்வு குழுவினர்
விவசாயிகளிடம் கூறினர்.

Tags : areas ,
× RELATED வால்பாறையில் ரூ.2.9 கோடி மதிப்பில் ‘ஸ்மார்ட் வேலி’ அமைக்கும் பணி தீவிரம்