×

கங்கை, யமுனை ஆறுகளைப் போல வைகையை காக்க ரூ.320 கோடியில் புதிய திட்டம் 10 கி.மீக்கு கரையோரச் சாலை விரிவாக்கம் கழிவுநீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையங்கள்

மதுரை, டிச. 5: கங்கை, யமுனை நதிகளைப் போல் வைகை ஆற்றை மாசுபாட்டில் இருந்து காக்க ரூ. 320 கோடியில், புதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மதுரையில் வைகை ஆற்றில் இருபுறமும் கரையோரச் சாலைகளை சீரமைத்து, 10 கி.மீ. நீளத்துக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிக்க ஆங்காங்கே, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.தேனி மாவட்டம், வருசநாடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் வழியாக 250 கி.மீ. தூரம் பாய்ந்து, ராமநாதபுரம் பெரிய கண்மாயில் கலக்கிறது. சுமார் 7 ஆயிரத்து 723 சதுர கி.மீ. பரப்புடையது.

இதில், மதுரை நகரில் பாதாள சாக்கடை நீர் கலப்பதால் வைகை மாசுபடுகிறது. இதனை தடுக்க, கடந்த 2000ல் மத்திய அரசு ரூ. 165 கோடி ஒதுக்கியது. இந்த திட்டம் முழுமை அடையாமல் அரைகுறையாக நிற்கிறது. கடந்த 18 ஆண்டுகளாக வைகையில் கழிவுநீர் கலப்பது அதிகரித்து வருகிறது. இதனால், ஆறு மாசடைந்து கூவமாக மாறி வருகிறது. இந்நிலையில் கங்கை, யமுனை நதிகளை தூய்மைப்படுத்தும் திட்டம் போல, வைகை ஆற்றையும் புண்ணிய நதி பட்டியலில் சேர்த்து, மாசுபாட்டில் இருந்து காக்க ரூ.320 கோடியில் புது திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய திட்டத்தின் விவரம் வருமாறு:

* மதுரை நகரில் வைகையாற்றின் இருபுறமும் கரையோரச் சாலை சிதைந்து கிடக்கின்றன. இதனை இருவழிச் சாலையாக சீரமைத்து, மேற்கில் துவரிமான் அருகில் நான்குவழிச்சாலை, கிழக்கில் விரகனூர் ரிங்ரோடு வரை நீடித்து விரிவாக்கம் செய்யப்படும். இரு கரைகளிலும் தடுப்புச்சுவர் அமைக்கப்படும். இதன் மூலம் வைகை கரை ஓரச்சாலை 10 கி.மீ. நீளத்துக்கு விரிவடைந்து இரு பக்கமும் நான்குவழிச்சாலையுடன் இணைக்கப்படும். அந்த சாலையில் வரும் வாகனங்களும், வைகை கரையோரச் சாலைகள் வழியாக நகரின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று திரும்ப வசதி ஏற்படுத்தப்படும். இதனால், நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

* கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, கழிவு நீரை சுத்திகரித்த பின்னர் ஆற்றில் கலக்கப்படும். இதனால், ஆறு மாசுபாட்டில் இருந்து மீளும். இது குறித்து, மதுரை எம்.பி. கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, “வைகை ஆற்றின் தூய்மையை காக்கவும், மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு என இரு நோக்கங்களுடன் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் நிதி ஒதுக்கீடு அளிக்க தயாராக உள்ளது’ என்றார்.

Tags : rivers ,Ganga ,Yamuna ,Vaigai ,
× RELATED நீலகிரியில் வெளுத்துக்கட்டுகிறது மழை...