×

நிரம்பி வழியும் அணைகள் பழநியில் கரையோர மக்களுக்கு இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை

பழநி, டிச. 5: பழநி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாயம், குடிநீருக்கு ஆதாரமான அணைகள் மற்றும் கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதில் அணைகள் முழுகொள்ளளவை எட்டியதால் நீர்திறப்பு செய்யப்பட்டுள்ளது. 65 அடி உயரம் உள்ள பாலாறு- பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 63 அடியை எட்டி விட்டது. அணையின் நீர்மட்டம் 63 அடியாக டிசம்பர் மாதம் 15ம் தேதி வரை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு விநாடிக்கு 129 கனஅடி நீர் வருகிறது. அதே நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் வெள்ள நீர் சண்முகநதி வழியாக சென்று ஆற்றில் கலக்கும். எனவே, மேற்படி ஆறுகளின் கரையோர கிராமங்களான பாலசமுத்திரம், பொருந்தல், தாமரைக்குளம், அ.கலையம்புத்தூர், பழநி, மானூர், கோரிக்கடவு, கீரனூர், அலங்கியம் மற்றும் சிறு கிராமங்களில் வாழும் மக்கள் தாங்களும், தங்களது உடைமைகளையும், கால்நடைகளையும் பாதுகாப்பாக வைத்து கொள்ளும்படி முன்னெச்சரிக்கை செய்து 3வது மற்றும் இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மழையின் காரணமாக பச்சையாற்றின் வெள்ளநீர் கலந்து சண்முகநதியில் கூடுதல் தண்ணீர் வரவாய்ப்புள்ளதால் சண்முகநதி கரையோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர். 67 அடி உயரம் உள்ள வரதமாநதி அணை நீர்மட்டம் 56.63 அடியாக உள்ளது. வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 80 அடி உயரம் உள்ள குதிரையாறு அணையின் நீர்மட்டம் 65.70 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 12 கனஅடி நீர் வருகிறது. வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. தவிர, பழநி பகுதியில் உள்ள 56 கண்மாய்களில் பெரும்பாலானவை நிரம்பி வருகிறது.

Tags :
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்