×

எர்ணாகுளம், கொச்சுவேலியில் இருந்து ஐதராபாத்துக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில்

சேலம், டிச.5:  எர்ணாகுளம், கொச்சுவேலியில் இருந்து ஐதராபாத்துக்கு சேலம் வழியே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில், கார்த்திகை மாதத்தையொட்டி, 40 நாள் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதனால், நாடு முழுவதும் இருந்து மாலை அணிந்து விரதம் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். இதையடுத்து, கூட்ட நெரிசலை தவிர்க்க, ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. நடப்பாண்டு இதுவரை 270 சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. தெற்கு ரயில்வே சார்பில் 244 சிறப்பு ரயில்கள், சென்னை-கொல்லம் மார்க்கத்தில் அனைத்து முக்கிய ரயில்நிலையங்களிலும் நின்று செல்லும் வகையில் இயக்கப்படுகிறது. இவை கடந்த 16ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை இயக்கப்படுகிறது. தென் மத்திய ரயில்வே சார்பில் 18 சிறப்பு ரயில்களும், கிழக்கு ரயில்வே சார்பில் 36 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இதனிடையே கொச்சுவேலி-ஐதராபாத் சிறப்பு கட்டண ரயில் (07116), ஜனவரி 7, 14, 21 மற்றும் 28ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், கொச்சுவேலியில் காலை 7.45 மணிக்கு புறப்பட்டு கொல்லம், காயங்குளம், செங்கானூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா வழியே ஐதராபாத்தை மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல், எர்ணாகுளம்- ஐதராபாத் சிறப்பு கட்டண ரயில் (07118) வரும் ஜனவரி 3, 10, 17, 24 மற்றும் 31ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, செகந்திராபாத்  வழியே ஜதராபாத்துக்கு அடுத்த நாள் இரவு 10.55 மணிக்கு சென்றடைகிறது. இந்த இரு ரயில்களுக்கும் முன்பதிவு தொடங்கியுள்ளது.

Tags : Ernakulam ,Salem ,Hyderabad ,
× RELATED மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம்:...