×

மாவட்டம் முழுவதும் மழை; சேறும் சகதியுமான சாலைகள்

திருவள்ளூர், டிச. 5: மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலைவரை பரவலாக மழை பெய்தது. கால்வாய்கள் தூர்ந்து போனதால் மழைநீர் சாலையில் தேங்கி சேறும் சகதியுமானதால் பாதசாரிகள் அவதிக்குள்ளானார்கள். ஆனால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழவரம், செங்குன்றம், தாமரைப்பாக்கம், பூண்டி ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று முன்திம் இரவு முதல் தொடர்ந்து நேற்று காலை வரை மழை கொட்டியது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கால்வாய்கள் சீராக இல்லாததாலும், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பையை கால்வாய்களில் கொட்டுவதாலும் மழைநீர் வெளியேற முடியாமல் தெருக்களில் குளம்போல் தேங்கியது. ஒரு நாள் பெய்த பலத்த மழைக்கே சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக மாறியதால் தெருக்களில் மக்கள் நடமாட முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் மாவட்டத்தின் நிலை என்னவாகும் என்ற நிலை மக்களிடம் கேள்வியாக எழுந்துள்ளது.

பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் கடும் அவதிப்பட்டனர். ஆனால், கிராமங்களில் விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்
துள்ளனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பொன்னேரியில் 129 மி.மீட்டர் மழையும், குறைந்த பட்சமாக ஜமீன்கொரட்டூரில் 2 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Tags : district ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...