×

ஆவடி நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சுடுகாடு

ஆவடி, டிச.5: ஆவடி நகராட்சியில் உள்ள விளிஞ்சியம்பாக்கம் சுடுகாடு ஆக்கிரமிப்பாளர் பிடியில் சிக்கி முறையான பராமரிப்பு இன்றி முட்புதர்கள் மண்டி கிடைக்கிறது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சிய இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆவடி நகராட்சி 30வது வார்டு, விளிஞ்சியம்பாக்கத்தில் 5 ஏக்கரில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டை தேவி நகர், பாரதிதாசன் நகர், நந்தவனமேட்டூர், சுராக்காபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுடுகாட்டில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் மதத்தினருக்கு தனித்தனியாக இடம் உள்ளது. இவர்கள் அனைவரும் தங்களது மத சம்பிரதாயப்படி சடலத்தை புதைக்கவோ அல்லது எரிக்கவோ செய்கின்றனர்.

இங்கு பல ஆண்டுகளாக அடிப்படை வசதி செய்து தரவில்லை. இதனால் பொதுமக்கள் சடலங்களை எரிக்க, புதைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், விளிஞ்சியம்பாக்கம் சுடுகாட்டில் மின்விளக்குகள் அமைக்காமல் உள்ளதால் இரவு நேரத்தில் சுடுகாடு இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் இரவு நேரத்தில் சடலங்களை எரிக்கவோ அல்லது புதைக்கவோ முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இந்த சுடுகாட்டில் சுற்றுச்சுவர் அமைக்காமல் உள்ளதால், இதனை சாதகமாக பயன்படுத்தி சமூக விரோதிகள் குப்பைகள் மற்றும் மரக்கழிவுகளை கொட்டுவதுடன் அதனை தீ வைத்து எரிக்கின்றனர். அதேபோல், சுடுகாட்டின் நுழைவாயிலில் கட்டிட இடிபாடுகளையும் கொட்டுகின்றனர்.

சுடுகாடு முறையாக பாராமரிக்காததால் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. மேற்கண்ட பிரச்னைகளால் சடலங்களை எடுத்து செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் சுடுகாட்டில் நுழைந்து மது அருந்துவது, கஞ்சா அடிப்பது உள்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்த நேரத்தில் சுடுகாட்டு  வழியாக சேக்காடு கிராமத்துக்கு ஏரிக்கரை ஓரமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர்.

விதிமுறைகள்படி இந்த சுடுகாட்டில் சடலங்களை எரிக்கவும், புதைக்கவும் ஆவடி நகராட்சி சார்பில் கட்டணம் வரையறுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி ஒரு சடலத்தை எரிக்கவும், புதைக்கவும் ₹4000 முதல் ₹6000 வரை ஊழியர்கள் வசூலிக்கின்றனர். இதனால் ஏழை, எளிய மக்கள் மிகவும் வேதனையடைகின்றனர்.அங்குள்ள தண்ணீர் தொட்டியில் பைப்புகள் உடைந்து, எந்த பயனும் இல்லாமல் காட்சி பொருளாக இருக்கிறது. காரிய மேடையும் பராமரிப்பு இன்றி இருப்பதால், ஈம சடங்குகளை செய்ய முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

ஆரம்பத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் இருந்த சுடுகாடு, தற்போது ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கியுள்ளதால் சுமார் 3 ஏக்கராக குறைந்துவிட்டது. இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் இன்னும் சில ஆண்டுகளில் சுடுகாட்டை முழுமையாக ஆக்கிரமித்து விடுவார்கள்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை நகராட்சி மற்றும் வருவாய் துறையினருக்கு புகார்கள் அனுப்பியும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து விளிஞ்சியம்பாக்கம் சுடுகாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அடிப்படை வசதிகளை செய்து தரவும், சமூக விரோதிகளின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்றனர்.

Tags : aggressor ,Avadi ,
× RELATED தீ விபத்தில் லாரி எரிந்து நாசம்