கலெக்டர் ஆபீசில் போலீசார் கெடுபிடி விவசாயிகள் முன்வாசலில் செல்ல எதிர்ப்பு

விருதுநகர், டிச.4: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் படைப்புழு தாக்கி சேதமடைந்த மக்காச்சோளம் பயிருக்கு நிவாரணம் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் எம்பி லிங்கம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டரிடம் மனு அளிக்க இருவரும் கட்சி நிர்வாகிகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றனர்.கலெக்டர் அலுவலகத்தின் 2 முன்புற கதவுகளும் பயோமெட்ரிக் கதவுகளாக மாற்றி இருப்பதால் கைரேகை வைத்தால் மட்டும் உள்ளே செல்ல முடியும். உள்ளே செல்ல முடியாத முன்னாள் எம்பியும், எம்எல்ஏவும் முன்புற கதவு வழியாகத்தான் செல்வோம், கதவை திறக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

சூலக்கரை போலீசாரே, கூட்டமாக சென்றால் கலெக்டர் திட்டுவார், எம்பி, எம்எல்ஏவை தவிர மற்றவர்கள் பின்பகுதி வழியாக செல்லுங்கள், கலெக்டர் காரை தொடாதீர்கள் திட்டுவார் என கூறினர். ஆனால் அவர்கள் இந்த வழியாகத்தான் செல்வோம் என அடம்பிடித்தனர். 15 நிமிடங்கள் கடந்த நிலையில், தகவல் அறிந்த வந்த சூலக்கரை இன்ஸ்பெக்டர் ஹரிஹரன், முன்னாள் எம்பி, எம்எல்ஏவிடம் தவறுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தார். அதிகாரிகளிடம் பேசி முன்பகுதி பயோமெட்ரிக் கதவை திறக்க வைத்து உள்ளே அனுப்பினார்.

கலெக்டரிடம் மனு அளித்து திரும்பி வந்த முன்னாள் எம்பி லிங்கம் கூறுகையில், மக்களுக்கான அலுவலத்தை பூட்டி வைத்து, பின்புற வாசல் வழியாக அனுப்புவது ஏற்புடையது அல்ல. மக்களை முன்புற வாசல் வழியாக அலுவலகத்திற்குள் நுழைய மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்றார்.


Tags : Kudupadi ,Office ,Collector ,maid ,
× RELATED குமரி முழுவதும் வீடுகளில் தொடர்...