×

பருவமழை கைவிட்டதால் கருகும் 35 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கவலையில் விவசாயிகள்

சாயல்குடி, டிச. 4:  தொடர் மழையின்றி முதுகுளத்தூர் தொகுதியில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் வறட்சியால் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். முதுகுளத்தூர் தொகுதியில் உள்ள கடலாடி, முதுகுளத்தூர் மற்றும் கமுதி தாலுகாவில் மானாவாரி எனப்படும் மழையை நம்பி மட்டுமே விவசாயம் நடைபெறுகிறது. ஆறு, கண்மாய், குளங்கள் இருந்தும் கூட, அவை முறையாக தூர்வாராமல், தூர்ந்துபோய் கிடப்பதால் நீர்பாசன விவசாயம் கேள்வி குறியாகி வருகிறது. இதனால் இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் மழை பெய்தது. பெரும்பாலான கண்மாய், குளங்கள் பெருகாததால், விவசாய நிலங்களில் கிடந்த தண்ணீரை பயன்படுத்தி உழவார பணிகளை செய்தனர். விவசாயிகள் களை எடுத்தல், உரம் போடுதல், களை கொல்லி, பூச்சிக்கொல்லி மருந்து அடித்தல் போன்ற பணிகளை அவசரம், அவசரமாக செய்தனர். தொடர் மழையில்லாததால், வயல்களில் போதிய தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கதிர் விடும் தருவாயில் உள்ள நெல் பயிர்களுக்கு டிராக்டர் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி ஊற்றி வருகின்றனர். இதனால் இந்தாண்டும் விவசாயத்தால் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக விவசாயிகள் வேதனை படுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, இப்பகுதியில் தொடர்ந்து வறட்சி நிலவி வந்தாலும், விவசாய காலங்களில் பெய்யும் மழையை நம்பி உழவார பணிகளை செய்து, நெல் போன்ற விதைகளை விதைத்து வருகிறோம், பயிர்கள் முளையிட்ட பிறகு களை எடுத்தல், உரம், பூச்சி கொல்லி மருந்து அடித்தல் போன்ற விவசாய பணிகளை ஆயிரக்கணக்கில் ரூபாய் செலவழித்து பராமரித்து வந்தோம். நல்லமுறையில் முளையிட்டு வளர்ந்து வரும் தருவாயில், தொடர் மழையின்றி பயிர்கள் கருகி வருகிறது. வயற்காடுகளில் ஈரப்பதம் இல்லாததால் கரையான், பூச்சிகள் பயிர்களை வெட்டி விடுகிறது. இதனால் விவசாயம் தொடர்ச்சியாக அழிந்து வருகிறது. மழை பொய்த்து போனதால் தேசிய பயிர்காப்பீடு திட்டத்தில் நெல், மிளகாய், கம்பு, சோளம், போன்ற பயிர்களுக்கு அந்தந்த பகுதி வங்கிகளில், ஏக்கருக்கு ரூ.340 பிரிமீயம் தொகை செலுத்தி, பட்டா 10(1), வி.ஏ.ஓ அடங்கல் சான்று மற்றும் தேவையான சான்றுகளுடன் நவ. 30க்குள் பயிர்களுக்கு காப்பீடு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

ஆனால் வி.ஏ.ஓ பற்றாக்குறை, அரசு இணையதளம் முடக்கம் போன்றவற்றால் 20 சதவீதத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் பயிர்காப்பீடு செய்யவில்லை. அரசு மெத்தனத்தால், காப்பீடு செய்ய முடியாத சூழல் இருந்தது. இதற்காக காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டித்து வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. கடந்தாண்டிற்கான பயிர்காப்பீடு தொகையையும் இன்றுவரை வழங்கவில்லை. விவசாயிகளுக்கு தேவையான  உதவிகளை செய்யாமல் மாவட்ட நிர்வாகம் கைவிட்டு விட்டது. விவசாயிகளுக்கு போதிய ஊக்கத்தை அரசு தராததால், அடுத்தாண்டு முதல் விவசாயம் செய்யாமல், திருப்பூர், கோவை போன்ற தொழி ல்வளமிக்க வெளிமாவட்டங்களுக்கு பிழைப்பு தேடி, கிராமத்தை விட்டு வெளியேற போவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை