×

மழைநீர் தேங்கி நிற்பதால் நோய் பரப்பும் இடமாக மாறி வரும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் பக்தர்கள் அவதி

கும்பகோணம்,டிச.4: தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தில் பல நாட்களாக மழைநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகும். இங்கு அடிக்கு 1008 சிற்பங்கள் என கூறுவர். கோயில் வகம் முழுவதும் நுணுக்கமான சிலைகள் முதல் பிரமாண்டமான சிலைகள் வரை தத்ரூபமாக சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கும். இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இந்நிலையில் கும்பகோணம் பகுதியில் சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்த மழைநீர் வடிய முடியாமல் கோயில் வளாகத்துக்குள்ளேயே தேங்கி நிற்கிறது. இதனால் சிவன் கோயிலின் முன்புறமுள்ள நந்தி மண்டபம், கோயில் உள்பிரகாரம், அம்மன் கோயில் முன்புறம், உள்பிரகாரம் என அனைத்தும் பகுதிகளிலும் மழைநீர் சுமார் 4 அடி வரை தேங்கி நிற்கிறது. இதனால் கோயிலில் உள்ள விநாயகர், நந்தியை வணங்குவதற்கு தேங்கி நிற்கும் மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பக்தர்கள் உள்ளனர்.

இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் மழைகாலத்தில் மழைநீர் தேங்கி நிற்பது வாடிக்கையாகிவிட்டது. மேலும் அம்மன் கோயில் வளாகத்திலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பக்தர்கள், கோயில் ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் கோயிலுக்கு வந்து செல்வதில் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.இதுகுறித்து கோயில் நிர்வாகிகளிடம் கேட்டபோது, கோயில் வளாகத்தில் தேங்கும் மழைநீர், கோயிலின் எதிரில் உள்ள குளத்துக்கு செல்லும் வகையில் குழாய் அமைக்கப்பட்டது. ஆனால் குழாயை மேலோட்டமாக  அமைத்ததால் குழாய்க்கு மேல் குளத்தில் தண்ணீர் நிரம்பியவுடன் கோயிலுக்குள் வந்து விடுகிறது. மோட்டாரை வைத்து இறைத்தாலும் தண்ணீர் வந்து கொண்டு தான் இருக்கிறது என்றனர்.எனவே கோயில் வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிரந்தரமாக மழைநீர் தேங்கி நிற்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : rain water storms ,devotees ,
× RELATED பாலத்தில் மோதி கார் நொறுங்கியது 4 பக்தர்கள் பரிதாப பலி