×

மீன் மார்க்கெட்டுக்கு இடம் வழங்க கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், டிச. 4: திருவள்ளூரில் முறையான அனுமதியின்றி இயங்கும் தனியார் மீன் மார்க்கெட் மீது நடவடிக்கைகோரியும், தங்களுக்கென மீன் மார்க்கெட் அமைக்க இடம் ஒதுக்க வலியுறுத்தியும் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் நகராட்சியில் 100க்கும் மேற்பட்ட மீனவ சமுதாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், கடந்த 50 ஆண்டுகளாக மீன்பிடி தொழில் செய்து, திருவள்ளூர் நகரில் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். ஈக்காடு சாலையில் உள்ள புல் தோட்டத்தில், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மீன் மார்க்கெட் அமைக்க இடம் ஒதுக்கி தருவதாக நகராட்சி நிர்வாகம் கூறியும், இதுவரை இடம் ஒதுக்கி தரவில்லை.

இந்நிலையில், அதே சாலையில், புதிதாக தனியார் மீன் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர் நகரில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புல் தோட்டம் பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்க நகராட்சி இடம் ஒதுக்கி தரவேண்டும் என, மீனவர் சங்க மாநில தலைவர் அன்பழகன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பூண்டி உள்நாட்டு மீனவர் சங்க தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் மன்னார் உட்பட 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மனு வழங்கினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : fishermen ,venue ,fish market ,
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி