×

அவளூர் கிராமத்தில் குடிநீர் பிரச்னை ஊராட்சி மன்ற அலுவலகத்தை திடீர் முற்றுகை

வாலாஜாபாத், டிச.4: வாலாஜாபாத் அருகே உள்ள அவளூர் கிராமத்தில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவளூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை திடீர் என முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாலாஜாபாத் அடுத்து அமைந்துள்ளது அவளூர்  ஊராட்சி. இந்த ஊராட்சி காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்டது. இந்த ஊராட்சியில் மேல்நிலைப் பள்ளி, ஆரம்பப் பள்ளி அங்கன்வாடி மையம், 24 மணி நேர சிகிச்சை, ஆரம்ப சுகாதார நிலையம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த ஊராட்சி பாலாற்றுப் படுகையை ஒட்டி அமைந்துள்ளது. மேலும் இந்த ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகரில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த காமராஜ் நகருக்காக இதே பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்றும் உள்ளது. இந்த நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் தான் நாள்தோறும் பாலாற்று குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக பாலாற்று குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறி 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவளூர் பஞ்சாயத்து அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர்.

மேலும் இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘’காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட அவளூர் ஊராட்சியில்  இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையமும் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் காமராஜர் நகருக்கு கடந்த ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம். மேலும் குடிநீருக்காக ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று நாள்தோறும் குடிநீர் பிடித்து வரும் சூழல் நிலவுகிறது. இதனால் எங்களுக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை ஒன்றிய அலுவலகத்திற்கு தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. அதேவேளையில் உள்ளாட்சி தேர்தல் நடந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் இங்கே இருந்தார்கள் என்றால் இதுபோன்ற சூழல் ஏற்படாது. உடனடியாக தலைவர்களிடம் தெரிவித்து ஓரிரு நாளில் இதுபோன்ற குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள். தற்போது தலைவர்கள் இல்லாததால் எந்த அதிகாரியை தொடர்பு கொண்டாலும் அதற்கான முழு விளக்கமும் தெரியவில்லை. மேலும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படுவதில்லை.  

இங்கு 24 மணி நேரமும் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள நோயாளிகளும் குடிநீரின்றி பெரும் அவதிப்படுகின்றனர். இந்த சூழ்நிலையை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு குடிநீர் பிரச்சனையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாலாற்றுப்படுகையை அருகாமையிலேயே வைத்துக்கொண்டு குடிநீர் பிரச்சினை என்று தெரிவிப்பது இதுதான் முதல்முறையாகும். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : blockade ,council office ,Panchayat ,village ,
× RELATED பிரானூர் ஊராட்சி பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை