×

வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி வழங்க கோரி திருக்குறுங்குடி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

களக்காடு,டிச.4:  களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தமிழக அரசின் அனைவருக்கும் இலவச வீடுகள் கட்டும் திட்டத்திற்கு 15 வார்டுகளிலும் 210 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வீடுகள் கட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணி ஆணை வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசு ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் நிதிஉதவி வழங்கும். மேலும் 14 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சூரியஓளியில் இயங்கும் மின் சாதனங்களும் வழங்கப்படும். 4 தவணைகளாக பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
 இதையடுத்து பொதுமக்கள் கடன் வாங்கி வீடு கட்டுமான பணிகளை தொடங்கினர். ஆனால் ஒரு ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு அரசு நிதி வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் வீட்டு கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க முடியாமலும், வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமலும் தவித்து வருகின்றனர். சிலர் தாங்கள் வசித்து வந்த பழைய வீடுகளை இடித்து விட்டு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி புதிய வீடுகள் கட்டும் பணியினை தொடங்கினர். தற்போது அவர்கள் வீட்டு வாடகை பணத்தை கொடுக்க முடியாமல் பாதிப்பு அடைந்துள்ளனர்.

 இதுபோல வீடு கட்டுமான பணிகள் நடப்பதால் மின்சார கட்டணமும் உயர்ந்துள்ளதால் பயனாளிகள் தவிப்பு அடைந்துள்ளனர். எனவே இலவச வீடு திட்ட பயனாளிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். இந்நிலையில் இதனை வலியுறுத்தி நேற்று பொதுமக்கள்  திரண்டு திருக்குறுங்குடி பேரூராட்சி அலுவலகத்தை திடீர் என முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி பரஞ்ஜோதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் நிதி பற்றாகுறையால் நிதி ஒதுக்கீடு செய்ய இயலவில்லை என்றும் விரைவில் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியபடுத்தி அரசு நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Demonstration ,public ,Thirukkurungudi ,Panchayat Office ,
× RELATED கிண்டி காந்தி மண்டப வளாகத்தில்...