கழுகுமலை, டிச. 4: கழுகுமலை அருகே குமராபுரத்தில் டாஸ்மாக் கடை திறக்க முயற்சிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அனைத்துக்கட்சியினர் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
கழுகுமலையில் இருந்து கோவில்பட்டி செல்லும் சாலையில் குமராபுரம் விலக்கு உள்ளது. இந்த விலக்கு அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் அரசு டாஸ்மாக் கடை அமைக்க உள்ள நிலையில் அதற்கு அனைத்து கட்சியினரும், குமராபுரம் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கலெக்டரிடமும் மனு அளித்தனர். மனு விவரம்: குமராபுரம் ஊர் விலக்கில் இருந்து 1 கி.மீ. தூரம் உள்ளது. இரவு நேரத்தில் வெளியூர்களில் இருந்து இங்கு வரும் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருபவர்கள், பஸ் நிறுத்தத்தில் இருந்து இறங்கி ஊருக்குள் செல்ல நடந்துதான் செல்ல வேண்டும்.
அத்துடன் அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். மதுபானக்கடை அமைய உள்ள இடத்தின் பின்புறம் உள்ள ஏராளமான விளைநிலங்களுக்கு செல்லும் கிராமப் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் பாதிப்புக்கு உள்ளாவர். அத்துடன் அவர்களது பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விடும். ஏற்கனவே இந்த கடையை வேறு இடத்தில் அமைக்கக்கூறி கடந்த 26ம் தேதி நடந்த போராட்டத்தின் போது சமரசப்படுத்திய டிஎஸ்பி ஜெபராஜ், இங்கு கடை வராது என்று உறுதியளித்தார். ஆனால், தற்போது கடையை திறக்க மீண்டும் முயற்சி நடக்கிறது. ஒருவேளை எதிர்ப்பையும் மீறி மதுக்கடையை திறந்தால் அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.