×

துறையூர் - பெரம்பலூர் சாலையில் வேகத்தடை குறைக்க கோரிக்கை

துறையூர், நவ. 30:  திருச்சி மாவட்டத்திலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது துறையூர் நகரம். சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைப்பதால் துறையூர் தாலுகாவாக செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமாக இருந்தபோது  பெரம்பலூர் தாலுகாவாக செயல்பட்டு வந்தது. தற்போது பெரம்பலூர் மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. துறையூரிலிருந்து நக்கசேலம், அம்மாபாளையம், குரும்பலூர் வழியாக பெரம்பலூர் செல்லும் நேர்வழி சாலை சுமார் 37 கிலோமீட்டர் தொலைவு கொண்டதாகும்.
இந்த சாலை வழியாக தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு கரூர், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, தாராபுரம், குளித்தலை, தரகம்பட்டி, காட்டுப்புத்தூர், தொட்டியம், தா.பேட்டை, நாமக்கல், பரமத்தி வேலூர் ஆகிய முக்கியமான ஊர்களிலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கும்பகோணம், சேலம் , சென்னை அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் 24 மணி நேரமும் சென்று வருகின்றன.

மேலும் பெரம்பலூரிலிருந்து நாமக்கல், சேலம், ஈரோடு, கோத்தகிரி, கோவை, மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும் துறையூர் முதல் பெரம்பலூர் வரையிலான சாலையினை பயன்படுத்தி வருகின்றன. சுமார் 37 கிலோமீட்டர் தொலைவிற்கு 50க்கும் அதிகமான வேகத்தடைகள், அபாயகரமான வளைவுகள், ஊரே இல்லாத இடத்தில் கட்டப்பட்ட தனியார் பள்ளிக்கூடத்திற்கு முன்பாக  விபத்தினை உண்டாகும் வேகத்தடைகள், 37 கிலோமீட்டர் தொலைவினை கடக்க 1.15 மணிநேர பயணம் என தினம் தினம் வேதனையினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த சாலையில் பயணம் செய்வது என்பது அனைத்து தரப்பு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் போக்குவரத்திற்கு சவாலான சாலையாகும். இந்த வழியில் சென்னை செல்லும் இலகு ரக வாகன ஓட்டிகள் திடீரென  போடப்பட்ட வேகத்தடைகளில் விட்டு வாகனம் பழுதாகி விடுகிறது.

பேருந்தில் பயணம் செய்யும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் போன்றவர்கள் நாள்தோறும் படும் அவஸ்தை சொல்லி மாளாது. பொது போக்குவரத்துத்துறை வாகனங்களான பேருந்து ஒவ்வொரு வேகத்தடையிலும் ஏறி இறங்கி செல்லும்  போது  பேருந்தின் வேகம் முற்றிலும் குறைக்கப்பட்டு மீண்டும் பழைய வேகத்திற்கு வருவதற்குள் அடுத்த வேகத்தடை என செல்வதால் எரிபொருள் அதிக விரயமாகிறது. விரயத்தினை குறைத்தால் சேமிப்பு அதிகம்.

எனவே வேகத்தடைகளை முறைப்படுத்தி அமைக்க வேண்டும் மற்றும் நெடுஞ்சாலைத்துறை விதிமுறைகளின் படி வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும்  ஆபத்தான வளைவுகளை சீராக்கி நேராக்க வேண்டும்  என அனைத்து தரப்பிலான வாகன ஓட்டிகள், முதுகுவலி, உடல்வலி இல்லாத பயணம் அமைய வேண்டும் என இந்த சாலையில் செல்லும் பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Tags : Duraiyur - Perambalur ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு