வரதட்சனை கேட்டு தாக்கியதால் பச்சிளம் குழந்தைக்கு கோமா

ஈரோடு, நவ. 30: வரதட்சனை கேட்டு தந்தை தாக்கியதில் பச்சிளம் குழந்தை கோமா நிலைக்கு சென்றது. இதுதொடர்பாக மனைவி அளித்த புகாரின் பேரில் கணவரை போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஹவா(26).  இவரது கணவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பாலத்தொழுவு பகுதியை சேர்ந்த அமானுல்லாகான்(28).இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அமானுல்லாகான் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு ஹவாவை சித்ரவதை செய்துள்ளனர்.

இந்நிலையில் ஹவாவிற்கு குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட தகராறின் காரணமாக, அமானுல்லாகான் ஹவாவை சரமாரியாக தாக்கினார். அப்போது ஹவா கையில் இருந்த பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் குழந்தையின் தலையில் பலமாக தாக்கினார். இதனால் அவரது குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றது.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி ஹவா, ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அவரது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் அமுதா, ஹவாவின் கணவர் அமானுல்லாகான், மாமியார் நர்கஷ்பானு, கணவரின் சகோதரி பர்வீன்பானு, கணவரின் சித்தி பர்கத் ஆகியோர் மீது வன்கொடுமை, கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த அமானுல்லாகானை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Daddy ,
× RELATED நீளமான பெயரா...? புதிய சிக்கல்...:...