×

முதுகுளத்தூர் அருகே நிரந்தர மருத்துவர் நியமிக்கப்படுவாரா?

சாயல்குடி, நவ. 30:   முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி அரசு கால்நடை மருத்துவமனையில் சுற்றிருக்கும் சுமார் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வளர்க்கும் மாடு, ஆடு, கோழி மற்றும் நாய் போன்றவைக்கு சிகிச்சை அளித்தும், தடுப்பூசிகள், மாத்திரை, மருந்துகளை வாங்கி கால்நடைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இங்கு நிரந்தர மருத்துவர் இல்லாததாலும், அடிக்கடி முகாமிற்கு சென்று விடுவதாலும், மருத்துவர் இன்றி மருத்துவமனை பூட்டியே கிடப்பதாக அப்பகுதி விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.  இதனால் மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் மற்றும் சினைகால பரிசோதனை மற்றும் சிகிச்சையளிப்பது கிடையாது. தற்போது ஆடு, கோழிகளை மர்ம நோய்கள் தாக்கி வருகிறது. அவைகளுக்கு உரிய சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் இல்லாததால் இறந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தேரிருவேலி கிராமத்தினர் கூறும்போது, தேரிருவேலி அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால், அடிக்கடி மருத்துவமனை பூட்டப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை பெறமுடியவில்லை. வாரம் பிரதி சனிக்கிழமைகளில் கோழிகளுக்கு தடுப்பூசி போடப்படும். ஆனால் சனி, ஞாயிற்று கிழமைகளில் மருத்துவமனை திறப்பது கிடையாது. மருத்துவர் இல்லாததால், உதவியாளர் கூட திறப்பது கிடையாது. மேலும் விபத்து மற்றும் திடீர் மர்ம நோய் தாக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கும் கால்நடைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியாமல் இறந்து விடுகிறது. பெரும்பாலும் மருத்துவமனை பூட்டியே கிடப்பதால் சமூக விரோதிகள் சீட்டு விளையாடுவது, மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போதை தலைக்கேறி பொருட்களை சேதப்படுத்தி சென்று விடுகின்றனர். இதனால் அரசிற்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே கால்நடை மருத்துவமனையில் நிரந்தர மருத்துவர் மற்றும் உதவியாளர்களை நியமிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : physician ,Mudukulathur ,
× RELATED என்னை பச்சோந்தி என்ற எடப்பாடி பச்சை...