×

தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை கழிப்பிடத்திற்கு முட்புதருக்குள் ஒதுங்கும் பெண்கள் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே இந்த நிலை

விருதுநகர், நவ. 30: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நல அலுவலத்திற்கு மாவட்டம் முழுவதும் இருந்து நலவாரிய அடையாள புதிய அட்டை பதிவு, பழைய அட்டை புதுப்பிக்க, உதவித்தொகை உள்ளிட்ட பணப்பலன்களுக்கு மனு அளிக்க தினசரி நூற்றுக்காணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மாவட்டத்தின் அனைத்துப்பகுதியில் இருந்தும் தொழிலாளர் நல அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு குடிக்க குடிநீர் இல்லாத நிலையில் மக்கள் கடைகளில் விலை கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய அவலநிலை தொடர்கிறது. அதைவிட கேவலம், நலவாரிய பதிவுக்கு வரும் மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லாத நிலையில் பெண்களும், ஆண்களும் திறந்தவெளியையும், முட்புதரையும் தேடிச் செல்கின்றனர். திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும், பின்தங்கிய மாவட்ட பட்டியலில் இருந்து விருதுநகர் மாவட்டத்தை நீக்கம் செய்ய வேண்டுமென ஆய்வு கூட்டங்களை கலெக்டர் மாதம்தோறும் நடத்துகிறார். ஆனால், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் திறந்தவெளி கழிப்பறை நடைமுறையில் இருப்பதை கண்டுகொள்ளவில்லை.

மேலும், நலவாரிய பதிவுக்கு வரும் மக்கள் அமர்வதற்கு அலுவலகத்தில் நாற்காலி வசதிகள் இல்லாததால் வயதான மற்றும் நோய்பதிப்புள்ள பெண்கள், ஆண்கள் என அனைவரும் தரையில் அமர வைத்து பதிவு செய்யப்படும் நடைமுறை தொடர்கிறது. பதிவிற்கு வரும் தொழிலாளர்கள் கூறுகையில், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் இருக்கை வசதி, குடிநீர், கழிப்பறை வசதி என எந்த அடிப்படை வசதியும் இல்லை. அனைத்து தொழிலாளர்களையும் தரையில் அமர வைக்கின்றனர். குடிநீரை கடையில் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. ஆண்களும், பெண்களும் இன பாகுபாடு இன்றி திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை தொடர்கிறது. மேலும் நலவாரிய அட்டை புதுப்பித்தல், பணப்பலன்கள் கோருதல் ஆகியவற்றை உரிய காலத்தில் நலவாரிய அலுவலர்கள் தருவதில்லை. பலமுறை அலையவிட்டு தருகின்றனர். மாவட்டத்தின் கடைக்கோடியில் இருந்து வருவதால் செலவினமும், வேலையிழப்பும் ஏற்படுகிறது. மாவட்ட கலெக்டர் தலையிட்டு தொழிலாளர் நலத்துறை அலுவலக வளாகத்தில் குடிநீர், கழிப்பறை, இருக்கை வசதிகள் செய்து தர உத்தரவிட வேண்டும். மேலும் தொழிலாளர்கள் விண்ணப்பங்களுக்கு விரைவான நடவடிக்கை எடுத்து அடையாள அட்டை முதல் பணப்பலன்கள் வரை கிடைக்க ஆவண செய்ய வேண்டுமென தெரிவித்தனர்.

Tags : women ,facilities ,collector ,office premises ,
× RELATED தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து...