×

தேனி அருகே உப்புக்கோட்டை கோயிலில் மீண்டும் உண்டியல் உடைப்பு

தேனி, நவ. 30: தேனி அருகே உப்புக்கோட்டையில்  நேற்றும் ஒரு கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டது.  தேனி அருகே உப்புக்கோட்டையில் கடந்த இரு மாதங்களாக நள்ளிரவு நேரத்தில் கோயில்களுக்குள் மர்மநபர்கள் புகுந்து அங்குள்ள உண்டியல்களை உடைத்து பணத்தை திருடும் சம்பவம் நடந்து வருகிறது. கடந்த இரு மாதங்களில் உப்புக்கோட்டை முல்லையாற்றங்கரையில் உள்ள வரதராஜபுரம் கோயில், பேச்சியம்மன் கோயில், உப்புக்கோட்டை அருகே சடையால்பட்டி விநாயகர் கோயில்களில் மர்மநபர்கள் புகுந்து உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிச்சென்றனர். நேற்று முன்தினம் உப்புக்கோட்டையில் டொம்புச்சேரி சாலையில்  உள்ள அங்காளஈஸ்வரி மற்றும் சீலைக்காரி அம்மன் கோயிலில் மர்மநபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச்சென்றனர்.

தொடர்ந்து உப்புக்கோட்டை பகுதியில் கோயில் உண்டியல்கள் திருடுபோவது குறித்து தினகரன் செய்தி நேற்று வெளியானது. இந்நிலையில் நேற்றும் உப்புக்கோட்டையில் இருந்து டொம்புச்சேரி செல்லும் சாலையில் உள்ள டொம்புச்சியம்மன் கோயிலில் மர்மநபர்கள் புகுந்து கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற சம்பவம் இப்பகுதி மக்களையும், பக்தர்களையும் கவலையடையச் செய்துள்ளது. உப்புக்கோட்டை பகுதியில் தொடர்ந்து கோயில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்படுவதை தடுத்து திருடர்களை கைது செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Thippasimha ,break ,temple ,Theni ,
× RELATED பெண் பாலியல் வன்கொடுமை – அர்ச்சகர் பணியிடை நீக்கம்