×

திருவாரூர் மாவட்டத்தில் மழையால் கஜாபுயல் மீட்பு பணிகள் பாதிப்பு

திருவாரூர், நவ. 30: திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் துவங்கியுள்ள மழை காரணமாக  கஜா புயல் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
கஜா புயலின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதன் காரணமாக மாவட்டத்தில் கிராம பகுதிகளில்  கடந்த 15ம்தேதி நள்ளிரவு முதல் நேற்று வரையில் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் இல்லாமல் இருந்து வருகிறது.   இதனால் பொது மக்கள் குடிநீருக்கு கூட திண்டாடும் நிலை இருந்து வருவதால் இதனை கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தின்ந்தோறும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 22ம்தேதி இரவு முதல் 24ம் தேதி மதியம் வரையில் பெய்த   கனமழை காரணமாக  மாவட்டத்தில் மீட்பு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் 4 நாள் இடைவேளைக்கு பின்னர் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை  பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து  திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரையில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி என மாவட்டம் முழுவதும் பலத்த மழை  பெய்தது. இதன் காரணமாக மீண்டும் 2வது முறையாக  மாவட்டத்தில்  மின் விநியோகத்தை சரி செய்யும் பணிகள் மற்றும் மரங்களை அகற்றும் பணிகள்  உட்பட பல்வேறு மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டு  வருகின்றன. மேலும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கும் மதிய உணவு தயார் செய்யும் பணியும் பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையில்  பெய்த மழையளவு மி.மீட்டரில் வருமாறு, திருவாரூர் 20.8, நன்னிலம் 21.2, குடவாசல் 14.8, வலங்கைமான் 25.4, மன்னார்குடி 20, நீடாமங்கலம் 18.2, திருத்துறைபூண்டி 103, முத்துப்பேட்டை 15, பாண்டவையாறு தலைப்பு 23.6 என மாவட்டம் முழுவதும் 262 மி.மீட்டர் மழையும், அதன் பின்னர் மாலை 4 மணி வரையில் மொத்தம் 286.8 மி.மீ மழையும் என 548.8 மி.மீ மழை பதிவாகியது.

Tags : Tiruvarur district ,
× RELATED மழையால் துளிர் விட்ட மரங்கள்...