மூலைக்கரைப்பட்டி அருகே இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடம்

நாங்குநேரி,  நவ. 30:  மூலைக்கரைப்பட்டி அருகே இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடம் காணப்படுவதால் பெற்றோர் அச்சமடைந்து உள்ளனர். மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள  ரெட்டார்குளத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது.  இங்கு இப்பகுதியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாணவர்கள்  பயின்று வருகின்றனர்.  பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இங்குள்ள  வகுப்பறைக் கட்டிடங்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன. ஏற்கனவே கான்கிரீட் கட்டிடம் பெயர்ந்து விழுந்து மாணவர்கள் காயமடைந்த சம்பவத்தை  தொடர்ந்து, அருகிலுள்ள வேறு பழைய ஓட்டுக்கூரை கட்டிடத்திற்கு வகுப்பறைகள்  மாற்றப்பட்டன. இந்த கட்டிடம் மோசமான நிலையில் இருந்ததால், இப்பகுதி பொதுமக்கள்  நன்கொடை வசூலித்து சேதமடைந்த ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பழுதுகளை நீக்கினர். பின்னர் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இப்பகுதியினர் சொந்த பணத்தில் சுற்றுச்சுவர் கட்டினர்.

 இதேபோல் பல்வேறு பள்ளி தேவைகளை பள்ளி நிர்வாகம் மற்றும் மேலாண்மை  குழுவினர் அவ்வப்போது நன்கொடையாக  அளித்து சரிசெய்து வருகின்றனர். இடிந்து விழும் நிலையில் காணப்படும் கட்டிடம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பள்ளி கட்டிடம் மோசமாக இருப்பதால் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். எனவே உயிர்பலி ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள ரெட்டார்குளம் பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : building ,government school ,collapse ,corner ,
× RELATED திருப்போரூர் அரசு பள்ளியில் பள்ளி கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா