×

தாம்பரத்தில் அதிகாரிகள் அதிரடி ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

தாம்பரம், நவ. 30: தாம்பரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.   மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் தாம்பரம் மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான கடைகள், வணிக வளாகங்கள் உள்ளது. தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், மண்ணிவாக்கம், சோமமங்கலம், நடுவீரப்பட்டு, கடப்பேரி, சானடோரியம், சேலையூர், சிட்லபாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தாம்பரம் மார்க்கெட்டிற்கு தினமும் வந்து செல்கின்றனர். இவ்வாறு தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மார்க்கெட்டாக தாம்பரம் மார்க்கெட் உள்ளது.

இந்நிலையில், தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள ஏராளமான நடைபாதை கடைகளுக்கு வியாபாரம் செய்து கொள்ள குறிப்பிட்ட அளவு சாலையோரம் ஒதுக்கப்பட்டு மஞ்சல் கோடு போட்டுள்ளனர்.  எனவே, வியாபாரிகள் அந்த கோட்டின் உள்ளே மட்டும் கடைகளை போட்டு வியாபாரம் செய்துகொள்ள வேண்டும். ஆனால் வியாபாரிகள் அனைவரும் அந்த கோட்டை தாண்டி கடைகள் போட்டு வியாபாரம் செய்து வருவதால் மார்க்கெட்டிற்கு நடந்து மற்றும் வாகனங்களில் வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, தாம்பரம் மார்க்கெட் பகுதியில் உள்ள சண்முகம் சாலை, அப்துல் ரசாக் சாலை, முத்துரங்கம் முதலி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவேண்டும் என பொதுமக்கள் சார்பில் தாம்பரம் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தனர். இதுகுறித்து, தினகரன் நாளிதழில் புகைப்படத்துடன் கடந்த மாதம் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, தாம்பரம் மார்க்கெட் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற தாம்பரம் நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.

அதன்படி, நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன், நகரமைப்பு ஆய்வாளர்கள் சங்கர், குமார், நாகராஜ், சுகாதார அலுவலர் அறிவு செல்வம், ஆய்வாளர் ஆல்பட் அருள்ராஜ் உட்பட 50க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் தாம்பரம் சண்முகம் சாலை, அப்துல் ரசாக் சாலை, முத்துரங்கம் சாலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு நடைபாதை கடைகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : stores ,Tampor ,
× RELATED ஆந்திராவில் மதுபானக்கடைகளை மூட உத்தரவு..!!