×

வெங்கல்-சீத்தஞ்சேரி சாலை சீரமைப்பு

ஊத்துக்கோட்டை, நவ. 30: ஊத்துக்கோட்டை  அருகே மாளந்தூர், மாமண்டூர், ஆவாஜி பேட்டை, கல்பட்டு, மெய்யூர் உள்ளிட்ட 10க்கும்  மேற்பட்ட  கிராமங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பள்ளி, கல்லூரி, வேலை சம்மந்தமாக வெங்கல் -  சீத்தஞ்சேரி சாலையை பயன்படுத்தி வெங்கல், சீத்தஞ்சேரி பகுதிகளுக்கு சென்று, அங்கிருந்து திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், கோயம்பேடு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலை வெங்கல் முதல் ஆவாஜி பேட்டை வரை சுமார் 4 கி.மீட்டர் தூரம் குண்டும், குழியுமாக, சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால், பைக்கில் செல்பவர்கள் சாலை பள்ளத்தில் விழுந்து விபத்துகள் அதிகரித்து வந்தது. எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால் அப்பகுதி மக்கள் கடந்த மாதம் 1ம் தேதி வெங்கல் மறியல் செய்ய முடிவு செய்தனர். இதையறிந்த வெங்கல் காவல் துறை அதிகாரிகள், தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 15 நாட்களில் சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், 50 நாட்களுக்கு மேலாகியும் சாலை போடவில்லை. இதனால் இத்தடத்தில் இயக்கப்படும் மாநகர பஸ்கள் நிறுத்தும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. அதன்பேரில், திருவள்ளூர் நெடுஞ்சாலை துறையினர் மேற்கண்ட சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags :
× RELATED ஏழைகளின் மெரினா என்றழைக்கப்படும்...