×

ஆவடி தம்பதி கொலை வழக்கில் தேடப்படும் ஆந்திர வாலிபர் மீது 21 கொள்ளை வழக்குகள்

ஆவடி, நவ. 30: தம்பதியினரை கொலை செய்து கொள்ளையடித்த நபர் மீது 21 கொள்ளை வழக்குகள் இருப்பதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ஆவடி சேக்காடு, ஐயப்பன் நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெகதீசன் (67). இவரது 2வது மனைவி விலாசினி (58). இருவரும் சென்னை தங்கசாலையில் உள்ள அரசு அச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். தம்பதிக்கு குழந்தை கிடையாது. ஜெகதீசன் வீட்டில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (35) என்பவர் தனது மனைவி லட்சுமியுடன் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார். வீட்டின் ஷெட்டில் இவர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில், 27ம் தேதி காலை ஜெகதீசன் அவரது மனைவி விலாசினி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். அப்போது, வீட்டில் தங்கியிருந்த ஆந்திர தம்பதினர் மாயமாகினர். கொலையான விலாசினி அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தன. மேலும், அவர்களது வீட்டில் உள்ள இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த சுமார் 50 சவரன் நகைகள், ரொக்கம் ஆகியவையும் கொள்ளைபோனது. புகாரின் பேரில், ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 5 தனிப்படை அமைத்து, மாயமான ஆந்திர தம்பதியை தேடி வருகின்றனர். ஆந்திர வாலிபர் சுரேஷ்குமாரின் செல்போன் கடந்த 24ம் தேதி முதல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரது செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்ததில், அடிக்கடி விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள உறவினர்களிடம் பேசியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படையினர் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் விரைந்துள்ளனர். அங்குள்ள சுரேஷ்குமார், லட்சுமி ஆகியோரது பெற்றோர், உறவினர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், ‘‘தலைமறைவாக உள்ள சுரேஷ்குமார் மீது விசாகப்பட்டினம் பகுதில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்பட 21 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 2017 செப்டம்பரில் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக சுரேஷ்குமாரை சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு போலீசார் கொண்டு வந்துள்ளனர். அப்போது, அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடி உள்ளார். அதன் பிறகு, அவரை ஆந்திர மாநில போலீசார் தேடியும் பிடிக்க முடியவில்லை. போலீசாருக்கு சுரேஷ்குமார் டிமிக்கி கொடுத்து வந்துள்ளார். பின்னர், அவர் ஆவடி, காமராஜர் நகர், ஆற்றோர தெருவில் மனைவி, குழந்தையுடன் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளார். பின்னர், கடந்த 15 தினங்களுக்கு முன்புதான் ஜெகதீசன் வீட்டில் வேலைக்கு சேர்ந்து உள்ளார்,’’ என்றனர். இவர்தான் தம்பதியை கொலை செய்து நகைகள், பணத்தை கொள்ளை அடித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சுரேஷ்குமார், விசாகப்பட்டினம் பகுதியில் இல்லாததால் சென்னை, புறநகர் பகுதியில்தான் பதுங்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அவரை 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : warrior ,Andhra ,
× RELATED வாரியூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.1.40 லட்சத்தில் டெஸ்க், பெஞ்சுகள்