×

இரு குடோன்களில் பதுக்கிவைத்திருந்த ரூ.12 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


விளாத்திகுளம், நவ. 29: விளாத்திகுளம் பகுதியில் உள்ள இரு குடோன்களில்  பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் அதிரடியாக ஆய்வுமேற்கொண்டு பறிமுதல் செய்தனர்.  மதுரை அண்ணாநகர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் போலீஸார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தன. இதையடுத்து காரில் இருந்த விளாத்திகுளம் காமராஜர் நகரை சேர்ந்த கன்னிராஜ் மகன் ஜெயராஜ் (40) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில், விளாத்திகுளம் பகுதியில் உள்ள 2 கிட்டங்கிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூடை மூடையாக இருப்பது தெரியவந்தது.

 இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட போலீஸார் தூத்துக்குடி எஸ்பி முரளி ராம்பாவிடம் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் எஸ்பி பிறப்பித்த உத்தரவை அடுத்து விளாத்திகுளம் போலீஸார், ஜெயராஜ் வாடகை எடுத்திருந்த சாக்கடை பாலம் அருகேயுள்ள கிட்டங்கியில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் 160 மூடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 இதே போல், விளாத்திகுளம் அடுத்த சித்தவநாயக்கன்பட்டி மேட்டுப்பட்டியில் உள்ள  கிட்டங்கியில் பதுக்கிவைத்திருந்த 224 மூடை புகையிலைப் பொருட்களையும் போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இருகுடோன்களிலும் பதுக்கிவைக்கப்பட்டிருந்த புைகயிலைப் பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.12 லட்சமாகும். இவற்றை விளாத்திகுளம் டிஎஸ்பி தர்மலிங்கம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் இதுதொடர்பாக ஜெயராஜ் தம்பி ஸ்டாலின் பெஞ்சமினிடம் (38) போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED அட்சய திருதியை முன்னிட்டு ஆனந் ஜூவல்லரியில் சிறப்பு விற்பனை