×

மெஞ்ஞானபுரத்தில் சாலையோரத்தில் குப்பை எரிப்பால் புகைமூட்டம்

உடன்குடி, நவ. 29: மெஞ்ஞானபுரத்தில் சாலையோரம் குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவதிப்படுகின்றனர்.   மெஞ்ஞானபுரம்  ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளில் சேரும் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு வருகின்றன. தற்போது நிர்வாகத்தில் உள்ள தனி அலுவலர்கள் இதை கண்டுகொள்வதில்லை.  இதனால் தற்போது குப்பைகளை ஆங்காங்கே சேகரித்து அப்பகுதியிலேயே எரித்துவிடும் அவலம் தொடர்கிறது. பொதுவாக இதுபோன்ற குப்பைகளை காட்டுப்பகுதியில் எரித்தால் குடியிருப்புவாசிகளுக்கு பாதிப்பு ஏற்படாது.

ஆனால் மெஞ்ஞானபுரம் கல்லறைத் தோட்டத்தை ஒட்டிய பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அங்கேயே தீவைத்து கொளுத்திச் செல்கின்றனர். இதன் அருகில் ஏராளமான குடியிருப்புகள், பள்ளிகள், பெண்கள் கல்வியியல் கல்லூரி, அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் உள்ளிட்டவை உள்ளன. இவ்வாறு குப்பைகளை தீயிட்டு எரிக்கும்போது ஏற்படும் புகைமூட்டத்தால் வாகனஓட்டிகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக அப்பகுதி முதியவர்கள் உள்ளிட்ட பலரும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாகி கடுமையாக அவதிப்படுகின்றனர். மேலும் சாலையை ஒட்டியே குப்பகைளை எரிப்பதால் புகைமூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது.  எனவே, அசம்பாவிதம் நடக்கும்முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Tags : museum ,
× RELATED அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி