×

சமக்ர சிக்ஷா திட்டத்தில் 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு a12,500 மானியம்

நாகர்கோவில், நவ.29: சமக்ர சிக்ஷா திட்டத்தில் 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு பள்ளி மானியம் ரூ.12 ஆயிரத்து 500 வீதம் வழங்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.  தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி மானியம் விடுவிக்கப்படுகிறது. இந்த நிதியை பயன்படுத்தி பலகைக்கு வண்ணம் தீட்டுதல், கழிப்பறை சுத்தம் செய்வது, குடிநீர் வசதி ஏற்படுத்துதல் போன்றவற்றுக்கு பயன் படுத்தப்படும்.

இந்த ஆண்டில் 15 முதல் 100 மாணவர்கள் உள்ள 21 ஆயிரத்து 378 பள்ளிகளுக்கு ரூ.25 ஆயிரம் வீதமும், 101 - 250 மாணவர்கள் உள்ள 6167 பள்ளிகளுக்கு 50 ஆயிரம், 251 - 1000 பேர் படிக்கும் 714 பள்ளிகளுக்கு ரூ.75 ஆயிரம், ஆயிரத்திற்கும் மேல் மாணவர்கள் பயிலும் 4 பள்ளிகளுக்கு, ரூ.1 லட்சம் ரூபாய் வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் 15 மாணவர்களுக்கு குறைவாக பயிலும் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு மானியம் விடுவிக்கப்படாத நிலை இருந்தது. இதனால் இந்தபள்ளிகளை கல்வித்துறை மூட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்தநிலையில் 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கும் பள்ளி மானியம் 2ம் கட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. சமக்ர சிக்ஷா அபியான் திட்ட மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள இது தொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

ஒன்று முதல் 14 மாணவர்கள் வரையுள்ள 3003 பள்ளிகளுக்கு ரூ.12 ஆயிரத்து 500 வீதம் பள்ளி மானியம் விடுவித்திட அனுமதி வழங்கப்படுகிறது. இந்த 1 முதல் 14 வரையுள்ள மாணவர்கள் கொண்ட பள்ளிகள் எண்ணிக்கையில் சிறார் பள்ளிகளும் அடங்கும். மேலும் பள்ளி மானியம் தொடர்பான உரிய நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : schools ,
× RELATED பெரணமல்லூர் ஒன்றிய அளவில் 68 தொடக்கப்...