×

ஆவடி - கண்ணப்பாளையம் இடையே மேம்பாலப்பணியை கிடப்பில் போட்ட நெடுஞ்சாலைத்துறைக்கு எதிராக போராட்டம்

ஆவடி, நவ.29: ஆவடி - கண்ணப்பாளையம் இடையே கூவம் ஆற்றின் குறுக்கே ₹6.60 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட பாலம்  பணிகள் கிடப்பில் கிடக்கிறது. இந்த மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி 10க்கு மேற்பட்ட கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்து  உள்ளனர்.   திருவள்ளூர் அருகே பேரம்பாக்கம் பகுதியில் உள்ள கேசாவரம் அணைக்கட்டில் இருந்து கூவம் ஆறு  தொடங்கி  பேரம்பாக்கம்,  கடம்பத்தூர், மணவாளநகர், புதுச்சத்திரம், ஆவடி, திருவேற்காடு மதுரவாயல், கோயம்பேடு வழியாக  சென்னை வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.  இந்த ஆறு செல்லும் ஆவடி, காமராஜர் நகர் - கண்ணப் பாளையம் கிராமத்திற்கு இடையே தரைப்பாலம் உள்ளது.

இதன் வழியாகத்தான் கண்ணப்பாளையம், மேல்பாக்கம், மேட்டுப்பாளையம், ஆயில்சேரி, சோராஞ்சேரி, அணைக்கட்டு, பாரிவாக்கம், சித்துக்காடு,  பூந்தமல்லி பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஆவடிக்கு தினமும் வந்து செல்கின்றனர். மேலும், ஆவடி நகராட்சி பகுதியைச் சேர்ந்த  பொதுமக்கள் மேற்கண்ட  தரைப்பாலத்தை கடந்து கண்ணப்பாளையம் வழியாக பூந்தமல்லிக்கு சென்று வருகின்றனர். இதனால் கூவம் ஆற்றின்  தரைப்பாலம் முக்கியத்துவம் வாய்ந்தது.

 இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில்,  ஆண்டுத்தோறும் மழைக்காலத்தில் கூவம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். அந்த சமயத்தில் ஆவடி-  கண்ணப்பாளையம் இடையிலான தரைப்பாலத்தின் மேலே தண்ணீர் வேகமாக செல்லும்.  தரைப்பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆவதால் உறுதி தன்மை  இழந்து வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்படுகிறது. மழைக்காலத்தில் அந்த தரைப்பாலத்தை பயன்படுத்த மக்கள் அச்சம் அடைகின்றனர்.      இதனை அடுத்து, 10க்கு மேற்பட்ட கிராம  பொதுமக்கள் ஆவடி - கண்ணப்பாளையம் இடையே கூவம் ஆற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம்  அமைக்க வேண்டும் என  கோரிக்கை வைத்தனர், இதையடுத்து நெடுஞ்சாலை துறையின் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் அலகு திட்டத்தின் கீழ்  கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.6.60 கோடி செலவில் உயர் மட்ட  மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது. மேலும், உயர் மட்ட மேம்பால பணிகளை 2016ம் ஆண்டு ஆகஸ்ட்  மாதத்தில் முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.    ஆனால் பணி முடிக்க திட்டமிட்ட காலத்தை விட 2ஆண்டுக்கு மேல் கடந்து விட்டது. இதன் பிறகும்  கூட மேம்பால பணிகள் முடிவடையாமல் கிடப்பில் உள்ளது என்றனர்.    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கூவம் ஆற்றின் குறுக்கே  கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் 3ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மழை காலத்திலும் பழுதான தரை பாலத்தின் மேலே  தண்ணீர் ஓடுவதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் செல்ல முடியவில்லை. இதனால் 10க்கு மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து  துண்டிக்கப்படுகிறது.

இதனை அடுத்து, அவர்கள் பல கி.மீ சுற்றி கொண்டு தான் ஆவடி, பூந்தமல்லி பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலப்பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் அனைத்து கிராம மக்களையும் திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய நிலை  ஏற்படும் என்றனர்.

மழை காலத்திற்கு பிறகு சாலை இணைப்பு பணி
நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறுகையில்,   ஆற்றின் குறுக்கே நடைபெறும் மேம்பால பணிகள் 90சதவீதம் முடிவடைந்து விட்டது. மேலும்,  மேம்பாலத்தை சாலையுடன் இணைக்கும் பகுதியில் நில கையெடுப்பு பணிகள் சமீபத்தில் தான் முடிந்து உள்ளது. மழை காலத்திற்கு பிறகு இணைப்பு  சாலை பணி தொடங்கப்பட்டு விரைவில் முடியும் என்றார்.

Tags : Aadhi - Kailapalayam ,
× RELATED ₹9.48 கோடி மதிப்பீட்டில் பூண்டி...