×

கடமலை - மயிலை ஒன்றியத்தில் கண்மாய்கள் ஆக்கிரமிப்பால் வீணாகும் மழைநீர் தேக்க முடியவில்லையென பொதுமக்கள் புகார்

வருசநாடு, நவ.29: கடமலை - மயிலை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி கண்மாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால் மழைநீர் வீணாக வெளியேறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடமலை - மயிலை ஒன்றியத்தில் ஏராளமான கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களில் கருவேல மரங்கள் அடர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் கண்மாய்களின் அளவு சுருங்கி விட்டது. இதனால் ஆற்றுப்பாசனம் மற்றும் கிணற்றுப்பாசனம், ஆழ்துளை கிணறுகள் மூலம் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக நீர்வரத்து குறைந்துள்ளதால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் விவசாயமும் நலிவடைந்துள்ளது. ஒன்றிய பகுதியில் உள்ள வருசநாடு பஞ்சம்தாங்கி, கோவில்பாறை, சாந்தன்நேரி, செங்குளம், கங்கன்குளம், புதுக்குளம், பெரியகுளம், சிறுகுளம் கண்மாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. இதனால் கண்மாய்களை சர்வே செய்யும் பணியும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியும் தொடர்ந்து நடக்கிறது. ஆனால், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது.

இதுகுறித்து விவசாயி பொன்னகர் முருகன் கூறுகையில்,`` ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் தண்ணீர் தேக்க முடியாத அளவிற்கு புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் அனைத்து கண்மாய்களிலும் இருந்து நீர் வீணாக வெளியேறுகிறது. மேலும் கண்மாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளது. இவற்றை அகற்றி கண்மாய்களை மீட்க வேண்டும்’’ என்றார். தங்கம்மாள்புரம் ஊராட்சிக்குட்பட்ட ஆத்துக்காடு சங்கரலிங்கம் கூறுகையில்,`` கடமலை- மயிலை ஒன்றியத்திலுள்ள அனைத்து கண்மாய்களையும் தூர்வார வேண்டும். அப்படி செய்து மழைநீரை முறையாக தேக்கினாலே குடிநீர் பஞ்சம் வராது. இதற்கான நடவடிக்கையை தேனி மாவட்ட கலெக்டர் செய்யய வேண்டும் ‘’ என்றார்.

Tags : Kadimalai - Tamilnadu ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்