×

அள்ளி பல மாசமாச்சு... குப்பை நகரமான காளையார்கோவில்

காளையார்கோவில், நவ. 29: காளையார்கோவிலில் உள்ள தெருக்களில் கடந்த சில மாதங்களாகக் குப்பைகள் அள்ளாமல் விட்டதால் புதிய குப்பைமேடுகள் உருவாகி உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசி வருகிறது. காளையார்கோவில் ஒன்றியம் 43 பஞ்சாயத்துக் கிராமங்களின் தலைநகரமாக உள்ளது. ஆனால், இப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட தெருக்களில் சில மாதங்களாகக் குப்பைகள் அள்ளாமல் தெருக்கள் முழுவதும் குப்பைமேடாக உள்ளது. இதனால் தெருக்கள் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காளையார்கோவில் ஊராட்சி சோமசுந்தரம்நகர் செல்லும் சிமெண்ட்ரோடு மற்றும் செட்டியூரணியை சுற்றிலும் குப்பையைக் கொட்டிவருவதால் மழைக்காலங்களில் அதிலிருந்து கழிவுநீராக வெளியேறி குளத்திற்கு செல்கின்றது. இதனால் குளம் முழுவதும் சாக்கடை நீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் பலநாட்களாக குப்பைகளை அள்ளாமல் விட்டதால் பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதேபோல திருநகர், செந்தமிழ்நகர், துதிநகர், அண்ணாநகர், தென்றல் நகர் மூர்த்திநகர், கிருஷ்ணாநகர் உள்பட 20க்கும் மேற்பட்ட தெருக்களில் குப்பை அள்ளாமலும், கழிவுநீர் தேங்குகின்றன. இதனால் உற்பத்தியாகும் கொசுகளினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே பன்றிக்காய்ச்சல், டெங்கு போன்ற வைரஸ் காய்சல் பரவிவருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. காளையார்கோவில் பகுதியில் குடிநீர்வசதி, தெருவிளக்கு போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.  இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, காளையார்கோவில் ஒன்றியத்தில் நிலவும் சுகாதாரக்கேட்டை உடனடியாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : garbage town ,Kalaiyorko ,
× RELATED குப்பை நகரமான பாவூர்சத்திரம்