×

50 ஆண்டு பின்னோக்கி சென்ற வாழ்க்கை ஆட்டுக்கல், அம்மியை தேடும் பெண்கள் காலத்தை மாற்றிய கஜா புயல்

சேதுபாவாசத்திரம்,  நவ.29:   தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் ஆடிய கோர தாண்டவத்தால் மனித வாழ்க்கை 50 ஆண்டு காலம்  பின்னோக்கி சென்றது. ஆட்டுக்கல், அம்மியை தேடும் நிலைக்கு பெண்கள் உள்ளாயினர்.
 தஞ்சை  டெல்டா மாவட்டத்தின் கடைகோடி பகுதியான பட்டுக்கோட்டை, பேராவூரணி,  சேதுபாவாசத்திரம் பகுதிகளில் கடந்த 4 வருடங்களாக வழக்கமாக நடைபெறும்  சம்பா சாகுபடி கைவிட்டு போனது. தென்னை ஒன்றை மட்டுமே வாழ்வாதாரமாக  கொண்டிருந்தனர். பெற்ற பிள்ளையை விட தென்னம்பிள்ளையைதான் கண்ணும் கருத்துமாக  வளர்த்தனர். ஆனால் இது போன்ற இழப்பு ஏற்படும் என யாரும்  எண்ணிப்பார்க்காதபடி கஜா புயல் கோர தாண்டவம் ஆடிவிட்டு  சென்றுவிட்டது. பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் சுமார் 40 ஆயிரம்  ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த தென்னை சாகுபடியில் 2.50  லட்சம் தென்னை மரங்களை வேரோடு சாய்த்தது. மீதம் நிற்கும் தென்னை மரங்களும்  தேறுமா என்பது சிறிது காலம் கழித்துத்தான் தெரியவரும்.

அது மட்டுமின்றி பல  ஆயிரம் கூரை மற்றும் ஓட்டு வீடுகளை சூறையாடியது. 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட  மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. 100க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பாரங்கள்  சாய்ந்தன. புயல் ஓய்ந்து 13 நாட்களுக்கு மேலாகியும் இருளில்தான் மக்கள்  வாழ்ந்து வருகின்றனர். மின்சாரம் எப்போது கிடைக்குமென்றே தெரியாத நிலையில்  உள்ளது. சேமிப்பு பணத்தை எடுக்க ஏடிஎம் கிடையாது. கடலோர பகுதியில்  மீனவர்களையும் விட்டுவைக்கவில்லை. 246 விசைப்படகுகள் 750க்கும் மேற்பட்ட  நாட்டுப்படகுகள் தேசமாகின.   அத்தியாவசியமான மின்சாரம் இல்லாததால்    தற்போதைய வாழ்க்கைக்கு பழைய மண்ணெண்ணெய் விளக்கு, மெழுகுவர்த்தி, மாவு அரைக்க  ஆட்டுக்கல், மிளகாய் அரைக்க அம்மிக்கல்லை பெண்கள் தேடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய  நிலையில் மனிதனின் வாழ்க்கை 50 ஆண்டு காலம் பின்னோக்கி சென்றுவிட்டது.

Tags :
× RELATED பாபநாசம் அருகே பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது