×

செம்பனார்கோவில் அருகே வீரட்டேஸ்வரர் கோயில் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்

செம்பனார்கோவில், நவ.29: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ள பரசலூர் வீரட்டேஸ்வரர் கோவில் செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செம்பனார்கோவில் அருகே திருப்பறியலூர் என்கிற பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில் உள்ளது.  இது தட்சன் யாகம் நடத்திய கோயிலாகும்.  இங்கு சிவனின் 64 சக்திகளுள் ஒன்றான பிரம்மபுத்திர சாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  இக்கோவிலுக்கு சென்று வணங்கி வந்தால் பாவங்கள், புத்திர தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மிகவும் பிரசித்தி பெற்ற  இக்கோயிலுக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இக்கோவிலுக்கு செல்லும் வழியில்தான் மேலக்கட்டளை, இளையாளுர் உள்ளிட்ட சிறு கிராமங்கள் உள்ளது.  

சுமார் 400 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் இந்த பகுதியில் உள்ள தார்சாலை குண்டும், குழியுமாக ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது.  இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் செம்பனார்கோவில் பகுதிக்கு வரவேண்டும் என்றாலும் மாவட்ட அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என்றாலும் பரசலூர் சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.  அப்படி இருக்கும் பட்சத்தில் சுமார் 5 கி.மீ உள்ள தார்சாலை மோசமாக உள்ளது.  மேலும் இப்பகுதி மக்கள் சென்று வருவதற்கு பேருந்து வசதியும் கிடையாது.  ஆனாலும் சாலைகள் மிக மோசமாக காணப்படுகிறது.  வழிபாட்டு தலங்களுடன், விவசாயமும் சேர்ந்து இருப்பதால் இப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
விவசாயிகள் உரம் எடுத்து செல்வதற்கும் விளைந்த நெற்களை எடுத்து செல்வதற்கும் ஆபத்தான சாலையில்தான் பயணித்து வருகின்றனர். இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் இந்த  தார்சாலையை கடக்கும்போது குண்டு குழிகளில் தடுமாறி விழுகின்றனர்.  இதனால் இப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  அதனால் பிரசித்திப் பெற்ற பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயிலுக்கு  செல்லும் சாலையை வெளியூர்களில் வரும் பக்தர்களும் ஆபத்தின்றி பயணிக்கவும், அப்பகுதியில் உள்ள கிராம மக்களும் பயன்படும் வகையில் உடனே சாலையை சீர்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags : temple ,Sembanarko ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள...