×

தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் ராணிப்பேட்டையில் நடந்தது 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து

ராணிப்பேட்டை, நவ. 29: ராணிப்பேட்டை அடுத்த நெல்லிக்குப்பம் கிராமம் சிப்காட் பகுதி 3ல் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில் மூன்றரை மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து ெதாழிலாளர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நெல்லிக்குப்பம் கிராமம் சிப்காட் பகுதி 3ல் தனியார் இரும்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு 75 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் மேற்கண்ட தொழிலாளர்களுக்கு கடந்த மூன்றரை மாதமாக சம்பளம் வழங்கவில்லையாம். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டும் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘சம்பளம் குறித்து நாங்கள் நிர்வாகத்தினரிடம் கேட்டால் எந்த பதிலும் அளிப்பதில்லை. இங்கு எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. மேலும், நாங்கள் அதிகாரிகளிடம் சம்பளம் கேட்டால் எங்கள் மீது சிப்காட் போலீசில் புகார் செய்து திருட்டு வழக்கில் உள்ளே தள்ளுவோம் என மிரட்டுகின்றனர். எனவே சம்பளம் தரும்வரை நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்’ என்றனர்.

Tags : sit-up strike ,RaniPettai ,
× RELATED சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு...