×

குமரி ஐஆர்இ உள்ளிட்ட இடங்களில் ரகசிய ஆய்வு தப்பி சென்ற பிரான்ஸ் நாட்டினரை கைது செய்ய விமான நிலையங்களுக்கு தகவல் அந்நிய நாட்டு சதியா? போலீசார் விசாரணை

நாகர்கோவில், நவ.28: குமரியில் வர்த்தக துறைமுகம் திட்ட பகுதிகள் மற்றும் இந்திய அரிய வகை மணல் ஆலை  பற்றி, ஆய்வு செய்ய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டினரை கைது செய்ய அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீசார் தகவல் அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், 4 வழிச்சாலை, சரக்கு பெட்டக மாற்று முனையம் மற்றும் வர்த்தக துறைமுக திட்டம் போன்ற  திட்டங்களுக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே இந்திய அரிய வகை ஆலைக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கடந்த 23ம் தேதி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இருவர் தங்கியுள்ளனர். மறுநாள் மேலும் இருவர் வேறு ஒரு உயர்தர விடுதியில் இரு அறைகள் எடுத்துள்ளனர். அப்போது, அவர்கள் தங்களது அடையாள ஆவணங்களை பின்னர் தருகிறோம் எனக்கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இருவர் அவர்கள் பதிவு செய்த அறையில் வந்து தங்கியுள்ளனர். பின்னர் அவர்கள் வெளியே சென்றுள்ளனர். இவர்களை இரு கார்களில் மதபோதகர் ஒருவர் அழைத்து சென்றுள்ளார். வர்த்தக துறைமுகம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படும் பகுதிகளை வீடியோவில் பதிவு செய்துள்ளனர். அதன்பின் சின்னவிளை கிராமத்திற்கு சென்று விட்டு, மணவாளக்குறிச்சி இந்திய அரிய வகை மணல் ஆலைக்கு சென்றுள்ளனர். அங்கு படம் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் திரும்பியுள்ளனர்.

இதனை அறிந்த உளவுப்பிரிவு போலீசார், வெளிநாட்டினர்கள் ஏன் இங்கு வரவேண்டும் என விசாரிக்க தொடங்கினர். அப்போது அவர்கள் உரிய ஆவணங்கள் அளிக்காமல் தங்கி இருந்தது தெரியவந்தது. இதுபற்றி, ஹோட்டலில் போலீசார் விசாரித்த தகவல் ஹோட்டல் வரவேற்பாளர் மூலம் அவர்களுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அறையில் இருந்த நபர் தங்களது உடமைகளை எடுத்துக் கொண்டு வரவேற்பாளரிடம் வெளியே சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். அப்போது அவரை போலீசார் மடக்கினர்.
அவர் அளித்த தகவலின் பேரில், பிரான்ஸ் நாட்டினரை பிடிக்க முயன்றபோது, அவர்கள் மதபோதகருடன் காரில் குளச்சலில் இருந்து, குறும்பனை சென்றுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் எங்கு சென்றனர் என்பது தெரிய வில்லை. இதுபற்றி மதபோதகரிடம் உளவு பிரிவு போலீசார் மறைமுகமாக விசாரித்துள்ளனர். அப்போது, அவர் அவர்களை தங்களுக்கு தெரியாது எனக் கூறியுள்ளனர். ஆனால் ேஹாட்டல் கண்காணிப்பு கேமராவில் மதபோதகர் உடனிருப்பது போலீசாரிடம் சிக்கியுள்ளது. இதனையடுத்து தப்பிய பிரான்ஸ் நாட்டினரை  போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அனைத்து விமான நிலையங்களுக்கும் அவர்கள் தப்பி செல்ல முடியாத படி தகவல் அளித்துள்ளனர்.  

நாட்டின் பாதுகாப்பில் சமரசம் இல்லை

வெளிநாட்டினர் ஆவணங்கள் அளிக்காமல் தங்கி இருந்தது ஏன்? கடற்கரை கிராமங்களில் அமைதியை குலைத்து நாட்டின் ஸ்திரத் தன்மையை குலைக்க முயல்கின்றனரா? அல்லது முக்கிய திட்டங்கள் பற்றி அறிந்து அதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படும் வகையில் செயல்படுகின்றனரா? என்பது பற்றி மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார் தங்களது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதற்கிடையே போலீசார் பிடித்த இருவரை குமரி போலீசார் விடுவித்து விட்டனர். எனினும் அவர்களது நடவடிக்கைகள் அனைத்தையும் உளவு பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் இதில் அதிரடி நடவடிக்கைகள் இருக்கலாம் என போலீசார் மத்தியில் கூறப்படுகிறது.

Tags : inspection ,places ,airports ,nationals ,investigation ,French ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...