×

கொச்சுவேளி ரயில் ரத்து காங்கிரஸ், அனைத்து கட்சி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி பிரின்ஸ் எம்எல்ஏ பேட்டி

நாகர்கோவில், நவ. 28:  கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை அதிக பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயிலை கடந்த 15ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த பிறகு திருவனந்தபுரம் அருகே உள்ள கொச்சுவேளிக்கு பயணிகள் ரயிலாக ரயில்வே நிர்வாகம் இயக்கியது. அன்றையநாளில் இருந்து கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் ரயில் ெசன்னைக்கு தினமும் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர். பயணிகள், பொதுமக்கள் மற்றும் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கொச்சுவேளிக்கு இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது குறித்து பிரின்ஸ் எம்எல்ஏவும், காங்கிரஸ் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி ரயில் கொச்சுவேளிக்கு இயக்கப்படும் என ரயில்வே அறிவித்தவுடன் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் கூட்டி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி, ரயில்வே அதிகாரி, காவல்துறையில் ரயிலை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதனை தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தில் கொச்சுவேளிக்கு இயக்கப்படும் ரயிலை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அனைத்து கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு அமைப்புகள், கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.   மேலும் இந்த ேபாராட்டங்கள் தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறவேண்டும். இரட்டை ரயில்பாதை பணியை விரைவில் முடிக்க வேண்டும். பள்ளிவிளை டவுன் ரயில்நிலையத்தில் உள்ள பிளாட்பார்ம்களை உயரமாக அமைக்க வேண்டும். மேலும் அடிப்படை வசதிகள் செய்யவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் அடுத்த கட்ட போராட்டங்களை நடத்தவுள்ளது. நாகர்கோவில் நகரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் பார்வதிபுரத்தில் பஸ் நிலையமும், ரயில்நிலையமும் அமைக்கவேண்டும்.  மார்த்தாண்டம் பாலம் அமைப்பதில் பல ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும். மார்த்தாண்டம் பாலம் ஆடுவதால் அந்த பாலத்தை திறக்க பா.ஜ அச்சப்படுகிறது. இது தொடர்பாக உலக வல்லுநர்களை கொண்டு ஆய்வு செய்து பாலத்தின் நிலைமையை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்றனர். பேட்டியின் போது காங்கிரஸ் சேவாதள தலைவர் எனல்ராஜ் உடன் இருந்தார்.

Tags : victory ,Congress ,interview ,MLA ,Prince ,party ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...