×

டாக்டர் வீட்டில் முகமூடி அணிந்து கொள்ளை முயற்சி ஆறுமுகநேரி குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு கேட்டு எஸ்பியிடம் முறையீடு

ஆறுமுகநேரி, நவ.28: ஆறுமுகநேரியில் டாக்டர் வீட்டில் கொள்ளை முயற்சி விவகாரத்தில் பொதுமக்கள் கலெக்டர், எஸ்பியிடம் நேரடியாக சென்று மனு அளித்தனர்.  இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி டிஎஸ்பிக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் நேரில் குடியிருப்பு மக்களிடம் விவரம் கேட்டு அறிந்தார். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் எஸ்.ஆர்.எஸ். கார்டன் குடியிருப்பு உள்ளது.  அங்கு அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், உயர் அதிகாரிகள் என ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் ஓய்வு பெற்ற இணை இயக்குநர் (நலப்பணிகள்) டாக்டர் திவாகரன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இரு வாரங்களுக்கு முன் இவரது வீட்டு காம்பவுண்ட் சுவர் மீது ஏறி குதித்த முகமூடி திருடன் கையில் இரும்பு ராடு, மற்றும் ஆயுதங்களுடன் நோட்டமிட்டு சென்றுள்ளான்.  மறுநாள் அவர்கள் வீட்டில் வழக்கம்போல் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அப்போது முகமூடி திருடன் வந்தது தெரியவந்தது. இது குறித்து செய்தி படத்துடன் கடந்த 16ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.
இதனை தொடர்ந்து ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் டாக்டர் புகார் தெரிவித்தார். போலீசார், வழக்கு ஏதும் பதியவில்லை. டாக்டர் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் யார் என்பதில் துப்புதுலக்க ஆர்வமும் காட்டவில்லை.

மேலும் ஏற்கனவே 13முறை திருட்டு மற்றும் திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது.  100 பவுனுக்கு மேல் கொள்ளை போய் உள்ளது. போலீசில் புகார் செய்தும் எந்தபலனும் இல்லை என அந்த குடியிருப்பை சேர்ந்த மக்கள் கொதிப்படைந்தனர். நேற்று முன்தினம் காலை அந்த குடியிருப்பு நலச்சங்கத்தை சேர்ந்த தலைவர், செயலாளர், பொருளாளர் தலைமையில் ஆண்கள், பெண்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டடோர் 2 வேன்களில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகத்தில்  மனு கொடுத்து திருடர்கள் குறித்து முறையிட்டனர். உடனடியாக விசாரணை நடத்துவதாக எஸ்பி முரளி ராம்பா அவர்களிடம் உறுதியளித்தார்.இதனையடுத்து, நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ஆறுமுகநேரி எஸ்.ஆர்.எஸ். கார்டன் குடியிருப்பு மக்களிடம் திருச்செந்தூர் டிஎஸ்பி திபு நேரடியாக சென்று விவரங்களை கேட்டார். இதுவரை நடந்த கொள்ளை பற்றி புகார் கொடுத்தும் எந்த திருடனும் சிக்கவில்லை.

மேலும் காவலர்கள் கூறிய அறிவுரையின்படி குடியிருப்பின் வெளிப்பகுதி மற்றும் உள் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளோம். இதற்காக நாங்கள் நலச்சங்கம் அமைத்து மாதம்தோறும் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு சிறிய தொகை வசூலித்து பாதுகாப்பு கருதி பகல், இரவு என 2 காவலாளிகளை நியமித்துள்ளோம். டாக்டர் திவாகரன் போன்று பல வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. பல வீடுகளில் வெளி பகுதியில் விடியவிடிய விளக்கும் எறியவிட்டுள்ளோம்.  இத்தனை பாதுகாப்பு வசதிகளை நாங்கள் செய்த பிறகும் திருடன் நுழைந்தால் எப்படி? என எதிர் கேள்வி கேட்டனர். அவர்களை டிஎஸ்பி திபு சமாதானப்படுத்திவிட்டு சென்றார்.  டிஎஸ்பியுடன் ஆறுமுகநேரி எஸ்ஐகள் இளங்கோ, மாடசாமி, பேரூராட்சி நிர்வாக அதிகரி சேகர் ஆகியோர் வந்திருந்தனர்.

Tags : doctor ,SPP ,house ,residence ,
× RELATED சம்மரை சமாளிப்போம்…