×

செம்பனார்கோவில் ஊராட்சி இ சேவை மையத்திற்கு செல்ல தனி வழித்தடம்

செம்பனார்கோவில்,நவ.28: செம்பனார்கோவில் ஊராட்சி ‘இ’ சேவை மையத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு தனி வழித்தடம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ‘இ’ சேவை மையம் இயங்கி வருகிறது. இதில் இப்பகுதி மக்கள் வருமான சான்று, ஜாதி சான்று, இருப்பிட சான்று, பட்டா மாற்றுதல் தமிழக அரசின் திட்டங்களான திருமணத்திற்கு தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகை, உள்ளிட்ட பல இந்த ‘இ’ சேவை மையத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில் இந்த ‘இ’ சேவை மையம் கட்டிடம் மிகவும் தாழ்வான பகுதியில் கட்டப்பட்டு உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் சூழ்ந்துவிடுகிறது. மேலும் இந்த ‘இ’ சேவை அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமென்றால் சாலையிலிருந்து தாழ்வான பகுதிக்கு இறங்கி அதன் பிறகு தான் அலுவலகத்திற்கு படிக்கட்டில் ஏற வேண்டும். இந்த சூழ்நிலையில் மாற்றுத்திறனாளிகளும் சான்றுகள் மற்றும் இதர திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்பொழுது அரசு சார்ந்த கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ‘இ’ சேவை கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என வழித்தடம் இல்லை.  மேலும் இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களே அலுவலக கட்டிடத்தின் இடது புறமாக கற்களையும், மணல் மூட்டைகள் வைத்தும் தங்களுடைய இருசக்கர வாகனத்தை அலுவலகம் கட்டிடத்தின் உள்ளே வைத்திருக்கிறார்கள். அதுவும் தற்பொழுது மழையினால் அரித்து சரிந்த நிலையில் உள்ளது. அதனால் மாற்றுத்திறனாளிகள் நலன் கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வான வழித்தடம் அமைக்க வேண்டும். மேலும் தாழ்வான பகுதியினை மணல்களை கொண்டு நிரம்பிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரி
க்கை விடுத்துள்ளனர்.

Tags : Panchayat E Service Center ,
× RELATED மூடியே கிடக்கும் கிராம ஊராட்சி இ-சேவை மையம்