×

கோமாரி நோய் தாக்குதல் எதிரொலி வாடிப்பட்டி சந்தைக்கு மாடு வரத்து குறைவு வியாபாரிகள் ஏமாற்றம்

வாடிப்பட்டி, நவ.28: மதுரை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் அதிகளவில் பரவி வருவதன் எதிரொலியாக வாடிப்பட்டியில் நடைபெறும் கால்நடை வாரச் சந்தைக்கு மாடுகளின் வருகை கணிசமாக குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது வாடிப்பட்டியில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் காய்கறி மற்றும் கால்நடை விற்பனை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். புகழ்பெற்ற இந்த கால்நடை சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். அவற்றை தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள்.

ஆனால் சமீபகாலமாக மழைக் காலங்களில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை அதிகளவில் தாக்கும் கோமாரி நோய் மதுரை மாவட்டத்தில் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக நேற்று வாடிப்பட்டியில் நடைபெற்ற கால்நடை வாரச் சந்தைக்கு 100க்கும் குறைவான மாடுகளே விற்பனைக்காக வந்தன. மாட்டு வியாபாரி ராஜசேகர் கூறுகையில், ‘‘வாடிப்பட்டி சந்தைக்கு 500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வருவார்கள். அதனை வியாபாரிகளாகிய நாங்கள் அதிகளவில் வாங்கிச் செல்வோம்.

ஆனால் நோய் தாக்குதலினால் அதிகப்படியான மாடுகள் சந்தைக்கு வரவில்லை. நோய் தாக்கிய மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரமாட்டார்கள் என்பதால் மாடுகளின் வரத்து கணிசமாக குறைந்ததுள்ளது. இதனால் மாடு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறோம்’’ என தெரிவித்தார். நோய் தாக்குதல் எதிரொலியாக மாடுகளின் வருகை குறைந்ததால் சந்தைக்கு கால்நடைகளை வாங்க வந்த விவசாயிகளும், வியாபாரிகளும் மாடு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் பரபரப்பாக காணப்படும் வாடிப்பட்டி கால்நடைச் சந்தையும் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : merchants ,
× RELATED அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு