×

லாஸ்பேட்டை காவல் நிலையத்தை ஏஐடியுசி தொழிற்சங்கம் முற்றுகை

புதுச்சேரி,  நவ. 28:  பாஜக பந்த் போராட்டத்தின்போது சுற்றுலா வாகனங்களை உடைத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி  ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில்  ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கேரளாவில் சபரிமலை ஐயப்பன்  கோயிலில் ஆகம விதிகளுக்கு எதிராகவும், அதன்  புகழுக்கு களங்கம்  விளைவிக்கும் வகையிலும் கேரள அரசு செயல்படுவதாககூறி புதுவையில் பாஜகவினர்  நேற்றுமுன்தினம் ஒருநாள் முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றைய தினம் அதிகாலையில் இசிஆரில் நிறுத்தப்பட்டிருந்த 13க்கும்  மேற்பட்ட வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டன. இதில் 2 வாகனங்களுக்கு மட்டும்  வழக்குபதிவு செய்யப்பட்டது.மீதமுள்ள வாகனங்களை  உடைத்தவர்கள் மீது வழக்குபதிவு செய்யவில்லை. இந்நிலையில் நேற்று காலை வாகன உரிமையாளர்கள் லாஸ்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏஐடியுசி பொதுச்செயலாளர்  சேதுசெல்வம் தலைமை தாங்கினார். தலைவர் தினேஷ் பொன்னையா, துணைத் தலைவர்கள்  முருகன், சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொருளாளர் சுப்பையா,  செயலாளர் ரவிச்சந்திரன், சுற்றுலா வாகன நிர்வாகிகள் தமிழ், தேவா,  நூர்முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்தது  ஏன் என போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன்  தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டனர். மீதமுள்ள வாகனங்களுக்கும் வழக்குபதிவு செய்து உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால், அனைவரும்  கலைந்து சென்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதுதொடர்பாக  ஏஐடியுசி சேதுசெல்வத்திடம் கேட்டபோது, பந்த்தின்போது இசிஆரில் 18 சுற்றுலா  வாகனங்கள் உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில்  புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் முற்றுகையில் ஈடுபட்டோம்.  அதன்பிறகு வழக்குபதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags : Siege ,AITUC ,LaSpace Police Station ,
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு