×

வாக்குப்பதிவு இயந்திரம், விவிபாட் செயல்விளக்க நிகழ்ச்சி

புதுச்சேரி, நவ. 28: இந்திய தேர்தல் ஆணையமானது, வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் (விவிபாட்) விழிப்புணர்வு செயல்விளக்க நிகழ்ச்சியை பல்வேறு கட்டமாக நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி வழுதாவூர் ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் (மாவட்ட தேர்தல் அதிகாரி) கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அபிஜித் விஜய் சவுத்ரி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஸ்வீப் ஒருங்கிணைப்பாளர் நெடுஞ்செழியன், இணைப்பு அதிகாரி கோவிந்தசாமி முன்னிலை வகித்தனர். வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரத்தின் செயல்பாடு, உண்மைத்தன்மை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பல்வேறு சந்தேகம், கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிகாரிகள் பேசும்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்.

அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். அதன்பிறகு, ஓட்டுப்பதிவு அன்று, அரசியல் கட்சி ஏஜெண்ட் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு, மாதிரி ஓட்டு போடப்படும். அதில் தவறு இருந்தால் வேறு மிஷின் மாற்றப்படும். விவிபாட் மிஷினில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் தெரிந்து கொள்ள முடியும். வேட்பாளர், சின்னம், வரிசை எண் ஆகியவை துண்டுசீட்டில் பதிவாகும். மிஷின் திரையில் அது 7 நொடிகள் தெரியும். அதன்பிறகு அது துண்டாகி மிஷினுக்கு உள்ளேயே விழுந்து விடும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை புளூடூத், வைபை மூலம் இயக்க முடியாது. மிஷினுள் இருக்கும் சிப்பை கழற்றினால் மிஷின் வேலை செய்யாது. இதனால் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்றனர்.   நிகழ்ச்சியில் 55 கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...