×

பெங்களூரு, திருப்பூரை சேர்ந்த திருட்டு ஆசாமிகள் 20 பேர் சிக்கினர் வேலூர் சரக டிஐஜி தகவல் திருவண்ணாமலை மகாதீப விழாவில் கைவரிசை காட்ட வந்த

வேலூர், நவ.28: திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்திருவிழாவில் கைவரிசை காட்ட வந்த பெங்களூரு, திருப்பூரை சேர்ந்த வழிப்பறி, திருட்டு ஆசாமிகள் 20 பேரை கைது செய்துள்ளதாக வேலூர் சரக டிஐஜி வனிதா தெரிவித்தார். திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கடந்த 23ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கார்த்திகை மகாதீப திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் மக்கள் வந்திருந்து, அண்ணாமலையை கிரிவலம் வந்ததுடன், மலை மீது ஏற்றப்படும் தீபத்தையும் தரிசித்து சென்றனர்.

இதற்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சிறப்பு பஸ் வசதி, கார் பார்க்கிங்கில் ஆன்லைன் வசதி என்று பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அதேசமயம் தீபத்திருவிழாவிற்கு வரும் பக்தர்களிடம் கைவரிசை காட்டும் ஆசாமிகளை பிடிப்பதற்காக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த குற்றவாளிகள் பட்டியல் திரட்டப்பட்டது. இவ்விவரங்களுடன் சிசிடிவி கேமரா மூலம் டிஐஜி வனிதா, எஸ்பி சிபிசக்கரவர்த்தி தலைமையில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் பக்தர்களிடம் கைவரிசை காட்ட வந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து டிஐஜி வனிதா கூறுகையில், ‘திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதேபோல் குற்றவாளிகள் பட்டியல் அடங்கிய தொகுப்பும் சிசிடிவி கேமராவில் பதிவேற்றியும், மப்டியிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் சிசிடிவி கேமரா மூலம் 2 பேர் மட்டுமே பிடிபட்டனர். போலீசாரிடம் 18 பேர் சிக்கினர்.

இவர்கள் பெங்களூரு, திருப்பூர், கோவை, கிருஷ்ணகிரி பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இவர்கள் பிக்பாக்கெட், கூட்டத்தில் நகை பறிப்பது போன்றவற்றில் கில்லாடிகள் என்பதால் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகளை தேடி வருகிறோம்’ என்றார்.

Tags : Bangalore ,Tirupur ,Thiruvannamalai Mahadeepa ,
× RELATED பெங்களூரு விமான நிலைய நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்!!