×

சுதேசி, பாரதி மில் தொழிலாளர்கள் மனித சங்கிலி

புதுச்சேரி,  நவ. 28: கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பபெற வலியுறுத்தி  புதுவையில் சுதேசி, பாரதி மில் தொழிலாளர்கள் மனித சங்கிலி போராட்டத்தில்  ஈடுபட்டனர். கோரிக்கை நிறைவேறும் வரை மேலும் பல கட்ட போராட்டம் நடத்தப்போவதாக தொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர். புதுவையில் பாரம்பரியமிக்க சுதேசி மற்றும் பாரதி பஞ்சாலைகள்  இயங்கி வருகின்றன. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சில மாதங்களாக ஊதியம்  வழங்கப்படவில்லை. இதனால் நிலுவை ஊதியம், தீபாவளி போனசை உடனே வழங்கக்கோரி  பஞ்சாலை ஊழியர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த  நிலையில் கவர்னர் கிரண்பேடி கோப்புகளில் கையெழுத்திடாமல் நிறுத்தி  வைத்துள்ளதாக தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கடந்த  சட்டமன்ற கூட்டத் தொடரின்போதே சுதேசி மற்றும் பாரதி பஞ்சாலை  தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.

 ஆனால் கடந்த 4 மாத  நிலுவை ஊதியம் மற்றும் தீபாவளி போனசை வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள  பி.எப்., இஎஸ்ஐ பணத்தை உடனே செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாலைகளில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட  ஊழியர்கள் நேருவீதியில் நேற்று மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேருவீதி- மிஷன் வீதி சந்திப்பில் திரண்ட அவர்கள் பாரதி வீதி சந்திப்பு வரை ஒருவருக்கொருவர் கைகோர்த்தபடி போராட்டம் நடத்தினர். பஞ்சாலை ஊழியர் தொழிற்சங்கம் அபிஷேகம் தலைமை தாங்கினார். அண்ணா  தொழிற்சங்கம் பாப்புசாமி முன்னிலை வகித்தார்.  ஐஎன்டியுசி ரவிச்சந்திரன்,  தங்கமணி, கிருஷ்ணன், தொமுச விஜயகுமார், பழனிசாமி, என்ஆர்டியுசி மோகன்தாஸ்,  ஜோதி, சண்முகம், சிஐடியு குணசேகரன், தேவராசு, கோபிகா, பாரதிமில் காங்கிரஸ்  தொழிற்சங்கம் குப்புசாமி, பரமசிவம், ஏஐடியுசி ரத்தினசபாபதி,  கல்யாணசுந்தரம், அம்பேத்கர் சங்கம் வின்சென்ட், முனியாண்டி, ஒருங்கிணைப்பு  சங்கம் சேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அனைவரும் கவர்னர்  கிரண்பேடியை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டுமென முழக்கமிட்டனர்.  தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை பலகட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாக  ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags : mill workers human chain ,Bharathi ,
× RELATED மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு...