×

போலீஸ் காரில் இருந்து தப்பிய பாலியல் புரோக்கர்கள் : அதிகாரிகள் உடந்தை என புகார்

சென்னை: போலீஸ் காரில் இருந்து விபசார புரோக்கர்கள் தப்பிச் சென்றனர். இந்த சம்பத்தில் அதிகாரிகளே உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சென்னையில் விபசார தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த சில மாதங்களாக எந்த கைது நடவடிக்கைகளும் எடுக்காமல் இருந்து வந்தனர். இதனால், நட்சத்திர ஓட்டல்கள் மட்டுமல்லாது, அடுக்குமாடி குடியிருப்புகளிலும் விபசாரம் கொடி கட்டிப் பறந்தது. இதனால் குற்றங்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. இதுகுறித்து போலீஸ் கமிஷனருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அந்த புகாரைத் தொடர்ந்து, விபசார கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கும்படி விபசார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும், விபசார தடுப்புப் பிரிவில் பணியாற்றிய பல அதிகாரிகளை அதிரடியாக மாற்றினார். அந்தப் பிரிவுக்கு புதிய உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நியமிக்கப்பட்டனர்.
விபசார தடுப்புப் பிரிவில் பணியாற்றிய ஒரு எஸ்.ஐ., மற்றும் ஏட்டு ஒருவர்தான் விபசார கும்பலுக்கும், அதிகாரிகளுக்கும் பாலமாக இருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, பிரபல விபசார கும்பலின் தலைவன் டெய்லர் ரவி கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து தனசேகர், கன்னட பிரசாத் உள்ளிட்ட பல முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிரமாக விபசார குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், போரூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து விபசார தடுப்புப் பிரிவு போலீசார் அந்த குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு 3 பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. அவர்கள் மீட்கப்பட்டனர். விபசார விடுதி நடத்திய அப்பு (எ)மணிகண்டன் மற்றும் அவரது தம்பிகள் 2 பேர் பிடிபட்டனர். இவர்கள் 6 பேரையும் விபசார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் தனது காரில் ஏற்றிக் கொண்டு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தார். வழியில், மீட்கப்பட்ட பெண்களில் சிலர், தங்களுக்கு மாதவிடாய் நேரம் என்பதால், நாப்கின் வாங்கித் தரவேண்டும் என்று கேட்டுள்ளனர். இதனால் போரூர் ரவுண்டானா அருகே காரை நிறுத்திய இன்ஸ்பெக்டர் நாப்கின் வாங்கச் சென்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் காரில் இருந்த 3 குற்றவாளிகளும் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம், 3 குற்றவாளிகளும் தப்பிச் சென்று விட்டதாக இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார். இந்த வழக்கில் தப்பி ஓடிய 3 விபசார குற்றவாளிகளையும் போலீசார் தீவிரமாக ேதடி வருகின்றனர். அதில் மீட்கப்பட்ட பெண்களுக்காக ஒரு இன்ஸ்பெக்டரே இறங்கி நாப்கின் வாங்கச் சென்றதாகவும், அப்போது குற்றவாளிகள் தப்பி விட்டதாகவும் இன்ஸ்பெக்டர் கூறியிருப்பது நம்பும்படியாக இல்லை என்று உயர் அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் குற்றவாளிகள் தப்பிச் சென்றதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது விபசார தடுப்புப் பிரிவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில், விபசார தடுப்புப் பிரிவில் பணியாற்றிய ஒரு எஸ்.ஐ. மற்றும் ஒரு ஏட்டு ஆகியோர் ஏற்கனவே ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். அங்கிருந்தபடி விபசார தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்காக மாமூல் வாங்கிக் கொடுத்து வருவதாகவும், பல குற்றவாளிகளின் செல்போன் தொடர்புகளை எடுத்துப் பார்த்தால், இவர்கள் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஆயுதப்படையில் இருந்தாலும், விபசார தடுப்புப் பிரிவு அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு குற்றவாளிகளுக்கு தொடர்ந்து தகவல்களை அனுப்பிக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. இதனால்தான் விபசார தடுப்புப் பிரிவு போலீசாரால் முக்கிய குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை என்கின்றனர். எனவே, ஆயுதப்படையில் பணியாற்றும் 2 பேரையும் சென்னை காவல்துறையில் இருந்து மாற்றினால் மட்டுமே தொடர்ந்து விபசார கும்பல்களை பிடிக்க முடியும் என்றும் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : Brokers ,
× RELATED வாட்ஸ்அப் குழு அமைத்து பாலியல் தொழில்...