×

ஊராட்சி நிதியை முடக்கியதால் கிராமங்களில் கேள்வி குறியான சுகாதாரம்

சாயல்குடி, நவ. 27: ராமநாதபுரம் மாவட்டத்தில், ஊராட்சி மன்றங்களின் நிதி முடக்கப்பட்டுள்ளதால், கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் முடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டாண்டிற்கு மேலாக உள்ளாட்சி நிர்வாகங்களில், உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்றி தனி அலுவலர் கட்டுப்பாட்டில் நிர்வாகம் நடந்து வருகிறது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில், 424 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இந்நிலையில் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி, திடீரென நிறுத்தப்பட்டதால், செலவு செய்ய நிதி ஆதாரம் இன்றி, கிராமங்களில் அடிப்படை வசதிகளும் முடங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் கிராமங்களில் தண்ணீர் விநியோகம் செய்வது, குடிநீர் தொட்டி பராமரித்தல், சாலை, தெரு விளக்கு, பொது சுகாதாரம் பராமரிப்பு, கழிவுநீர், குப்பைகளை அகற்றுதல், கொசு மருந்து அடித்தல், குளோரின் மருந்துகளை தெளித்தல், மழைக்கால முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட ஊராட்சி நிர்வாகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற சிறு சிறு வேலைகள் செய்யக்கூட, ஊராட்சி நிர்வாகத்தில் பணம் போதிய நிதி இருந்தும், செலவு செய்ய முடியாமல் கிராமங்களில் அடிப்படை வசதியின்றி முடங்கி உள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சங்க நிர்வாகிகள் சிலர் கூறும்போது, கடந்த இரண்டு ஆண்டிற்கு மேலாக ஊராட்சி நிர்வாகத்திற்கு தனி அலுவலர் மூலம் நிர்வாகம் நடந்து வருகிறது. மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில், ஒவ்வொரு யூனியனிலும் உள்ள, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு தனி மண்டல அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் அடங்கிய குழு, ஊராட்சிகளை நிர்வகித்து வருகின்றனர். கிராமங்களில் எந்தவொரு சிறு பணி செய்வதென்றால் கூட, அனைவரின் அனுமதி பெற வேண்டும். இதற்கு தேவைப்படும் நிதியை பெற அனைவருக்கும் கமிஷன் கொடுத்தால் மட்டுமே தேவையான நிதி கிடைக்கிறது, இதனால் ஊராட்சி செயலர்கள் கடன்காரர்களாகி, வேலை பளுவால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

போதிய நிதி இன்றி, அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்பட்டு, பொதுமக்களின் விமர்சனத்திற்கு உட்படுவதால், ஊராட்சி செயலர்கள் கை காசை போட்டு, சிறு, சிறு பணிகளை செய்து வருகிறார்கள். அதற்கு ஆதாரமான ரசீதுகளை அனுப்பினால் கூட, செலவு செய்த, போதிய பணம் கூட கிடைப்பதில்லை. அதிகமக்கள் தொகை கொண்ட ஊராட்சிகள் மற்றும் தேவையில்லாத செலவு செய்யாத, சேமிக்கும் ஊராட்சிகளில் குறைந்தபட்சமாக சுமார் ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதி ஆதாரங்கள் இருப்பு இருந்தது. இந்த நிதி ஆதாரத்தை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது.  இதனால் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும், முக்கிய அடிப்படை வசதிகளை செய்ய முடியாமல் ஊராட்சி செயலர்கள் திணறி வருகின்றனர். கிராமங்களில் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் பெரும்பாலான கிராம ஊராட்சிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் வருவது கிடையாது. ஆனால் கட்டாயமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு, குடிநீர் வரி செலுத்தும் நிலை உள்ளது. துப்புறவு பணியாளர்களுக்கு சம்பளம் பாக்கி இருப்பதால், அவர்கள் சரியாக பணிக்கு வருவது கிடையாது. இதனால், சுகாதாரக்கேடு நிலவுகிறது. ஊராட்சிகளில் போதிய நிதி ஆதாரம் இன்றி திண்டாடி வரும் சூழ்நிலையில், அரசு உத்தரவு எனக்கூறி மாவட்ட நிர்வாகம், ஊராட்சிகளின் இருக்கும் அனைத்து நிதி ஆதாரங்களையும் முடக்கி வருவதால், கிராமங்களில் அடிப்படை வசதிகளும் செய்ய முடியாத நிலை உருவாகி இருக்கிறது. எனவே ஊராட்சிகளில் வெளிப்படையான நிர்வாகம் நடைபெற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

Tags : questioning ,villages ,
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை