×

அந்தியூரில் சந்தை இடமாற்றத்தை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து வியாபாரிகள் தர்ணா

அந்தியூர், நவ. 27: அந்தியூர் சந்தையை இடமாற்றம் செய்வதை கண்டித்து வியாபாரிகள் நேற்று வியாபாரத்தை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.    ஈரோடு மாவட்டம் அந்தியூரில்பிரசித்தி பெற்ற சந்தை செயல்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை வெற்றிலை சந்தையும், சனி, ஞாயிறுகளில் கால்நடை சந்தையும், திங்கட்கிழமை மளிகை சந்தையும் நடக்கிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள், விவசாயிகள் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்தியூர் பஸ் நிலையத்தில் நெருக்கடி காரணமாக, சந்தை செயல்படும் பகுதிக்கு பஸ் நிலையத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது. பஸ் நிலையம் இடம் மாற்றுவது குறித்து கடந்த வாரம் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், அந்தியூர் எம்.எல்.ஏ., ராஜா கிருஷ்ணன், கலெக்டர் கதிரவன், எஸ்.பி., சக்திகணேஷ் மற்றும் வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் கடந்த வாரம் அந்தியூரில் ஆலோசனை நடத்தினர்.
தவிட்டுப்பாளையம் பகுதியிலுள்ள செல்லீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சந்தையை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு சந்தை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சந்தை இடமாற்றத்தை கைவிட கோரி நேற்று ஒருநாள் வியாபாரத்தை புறக்கணித்தனர். கருப்பு பேட்ஜ் அணிந்து அந்தியூரில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெண்கள் உள்பட ஏராளமான வியாபாரிகள் பங்கேற்றனர்.

இதனால் திங்கட்கிழமை எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்தியூர் வாரச்சந்தை நேற்று வெறிச்சோடியது. அந்தியூர் எம்.எல்.ஏ வாட்ஸ்அப் வீடியோ
அந்தியூர் வாரச்சந்தை மாற்றம் குறித்து அந்தியூர் எம்.எல்.ஏ ராஜா கிருஷ்ணன் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது அந்தியூர் பகுதிகளில் வைரலாக பரவி வருகிறது,இந்த வீடியோவில் எம்.எல்.ஏ ராஜா கிருஷ்ணன் கூறியிருப்பதாவது:
 அந்தியூர் வாரச்சந்தை 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தது. தற்போது, அந்தியூர் தனி தாலுகாவாக பிரிக்கப்பட்ட பிறகு சந்தையின் ஒரு பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், கருவூலம் என அரசாங்க கட்டிடங்கள் அங்கு கட்டப்பட்டன.  

சந்தைக்கு போதுமான இடம் இல்லை. தற்போது 3.5 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே சந்தை செயல்படுகிறது. அந்தியூர் பஸ் நிலையம் குறுகிய இடத்தில் செயல்படுகிறது. எனவே பஸ் நிலையத்தை வாரச்சந்தைக்கு மாற்றி விட்டு, வாரச்சந்தையை அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட உள்ளது. இதில் 10 ஏக்கர் வாரச்சந்தைக்கும், 3 ஏக்கர் மாட்டுச்சந்தைக்கு பிரித்து விடப்படும். அங்கு வியாபாரிகளுக்கு போதுமான இட வசதி செய்து தரப்படும். சந்தைக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும், தற்போதுள்ள பஸ் நிலையத்தை தினசரி மார்க்கெட் ஆக செயல்படுத்தப்படும். இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Tags : darana traders ,
× RELATED நகராட்சி அதிகாரிகள் அதிரடி கூடலூர்...