×

பண்ருட்டி அருகே எனதிரிமங்கலத்தில் மணல் குவாரியை மூடக்கோரி மறியல்

பண்ருட்டி, நவ. 27: பண்ருட்டி அருகே எனதிரிமங்கலத்தில் இயங்கி வரும் அரசு மணல் குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகை, சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போது, போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம், மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எனதிரிமங்கலத்தில் அரசு சார்பில் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான லாரிகளில் தினமும் மணல் எடுத்து செல்லப்படுகிறது. அளவுக்கு அதிகமாக மணல் எடுத்தால் தண்ணீர் வளம் குன்றிவிடும், விவசாயம் பாதிப்படையும் என்று கிராம பொதுமக்கள் கடந்த வாரம் லாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை அப்புறப்படுத்தினர். இருப்பினும் தொடர்ந்து 3 நாட்களாக மணல் குவாரியை மூடக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டு மணல் அள்ளக்கூடாது, குவாரியை மூட வேண்டும் என கூறி கூச்சலிட்டனர். ஆனால் மக்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் குவாரி நிர்வாகத்தினர் தொடர்ந்து மணல் அள்ளி கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெண்ணை ஆற்றின் அருகிலேயே உட்கார்ந்து சாலை மறியல் செய்தனர். தகவலறிந்த புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் சார்பில் போலீசாரிடம் கூறுகையில், நாங்கள் ஏற்கனவே சில ஆண்டிற்கு முன் மணல் குவாரியால் பாதிப்படைந்தோம். இதனால் நீர்வளம் குன்றி விவசாயம் பாதித்தது. தாசில்தார், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு வழங்கப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதிகாலை 6 மணிக்கே மணல் லாரிகள் செல்வதால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நாங்கள் யாரிடம்தான் இந்த பிரச்னை குறித்து மனு கொடுக்க வேண்டும் என கேட்டனர்.

இதற்கு போலீசார், நீதிமன்றத்தை நாடுங்கள். தீர்வு கிடைக்கும் என்று கூறினர். விதிமுறைகளை மீறித்தான் மணல் அள்ளுகின்றனர் என கிராம மக்கள் ஆவேசத்துடன் கூறினர். இதனால் பொதுமக்கள் போலீசாரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்னை அதிகமாவதை அறிந்த போலீசார் பெண்கள், ஆண்கள் அனைவரையும் கைது செய்வதற்காக வேனில் ஏற்றினர். அப்போது பெண்களுக்கும் பெண் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடன் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றியதால் கைகலப்பு ஏற்பட்டது. இதில் பெண் போலீசாரின் கைகடிகாரங்கள் காணாமல் போனது. சில பெண்களுக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 45 பேரை கைது செய்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அரசு மணல் குவாரியால் குடிநீர் பிரச்னை உள்பட விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை மூட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. அடக்குமுறையை கையாண்டு மக்களை ஒடுக்க முடியாது. மணல் குவாரியை மூடும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றனர்.

Tags : sand quarry ,Eidrimamangalam ,Panrutti ,
× RELATED பராமரிப்பு இன்றி கிடக்கும் கால்நடை மருத்துவமனையை சீரமைக்க வேண்டும்