×

சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே... இளம்பெண்களை வைத்து ஏட்டு பாலியல் தொழில்

* பெண் புரோக்கருடன் சேர்ந்து கல்லா கட்டியது அம்பலம்
* பணம் தராமல் ஏமாற்றினால் திருட்டு வழக்கு, அடிஉதை
* கால்டாக்சி டிரைவர் புகாரால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை

சென்னை: பெண் புரோக்கருடன் சேர்ந்து, அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண்களை வைத்து போலீஸ் ஏட்டு பாலியல் தொழில் நடத்தி வந்த சம்பவம்  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கால்டாக்சி டிரைவர் கொடுத்த புகாரால் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி (37). இவர், கோயம்பேடு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் ஒன்று  அளித்தார். அதில், என்.எஸ்.கே. நகர் பஸ் நிலையம் அருகே எனது பைக்கில் இருந்த மணிபர்சை கால் டாக்சி டிரைவர் விஸ்வநாதன் என்பவர் திருடி விட்டதாக  குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரின்படி, கோயம்பேடு குற்றப்பிரிவில் பணியாற்றும் பார்த்தா என்ற பெயர் கொண்ட தலைமை காவலர் ஒருவர், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று கால்  டாக்சி டிரைவர் விஸ்வநாதனை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். பிறகு, புகார் கொடுத்த ஜெயந்தியுடன் சேர்ந்து கால் டாக்ஸி டிரைவரை  தலைமை காவலர் அடித்து உதைத்து அவரிடம் இருந்து ₹900 பணத்தை பறித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத விஸ்வநாதன் செய்வது  அறியாமல் தவித்தார்.

ஒருகட்டத்தில் பாதிக்கப்பட்ட விஸ்வநாதன் கோயம்பேடு காவல் நிலையத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடம் நடந்த சம்பவம் குறித்து அழுதபடி புகார் அளித்தார்.  அதன்படி, அதிகாரிகள்  விசாரணை நடத்தினர்.அப்போது, புகார் அளித்த ஜெயந்தி பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் விஸ்வநாதன், என்எஸ்கே நகர் பேருந்து நிலையத்தில்  பாலியல் புரோக்கர் ஜெயந்தியை அணுகியுள்ளார். அப்போது, உல்லாசத்திற்கு ₹2000 கட்டணமாக ஜெயந்தி கேட்டுள்ளார். பின்னர் ஒரு வழியாக ₹1500  கட்டணத்தின் படி இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உல்லாசமாக இருந்துள்ளனர். பிறகு, விஸ்வநாதனிடம் உல்லாசத்திற்கான  கட்டணத்தை ஜெயந்தி கேட்டுள்ளார். அதற்கு விஸ்வநாதன், ‘‘என்னிடம் பணம் இல்லை. நாளை தருகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பணம் வராததால் விரக்தியடைந்த அவர், கால் டாக்சி டிரைவர் மீது மணிபர்சை திருடியதாக  கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தது தெரியவந்தது. சம்பவம் நடந்த இடம் அமைந்தகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி. ஆனால்  கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தது ஏன் என்று ஜெயந்தியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதற்கு அவர் அவசரத்திற்கு நான் புகார்  அளித்தேன் என்று கூறி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

உடனே போலீசார் பாலியல் புரோக்கர் ஜெயந்தியின் செல்போனை பெற்று ஆய்வு செய்தனர். அப்போது, ஜெயந்தி கோயம்பேடு காவல் நிலையத்தில் பணியாற்றும்  தலைமை காவலர் பார்த்தா என்பவரிடம் புகார் கொடுப்பதற்கு முன்பு பலமுறை பேசியது தெரியவந்தது.அதன்படி சம்பந்தப்பட்ட தலைமை காவலர் மற்றும் பாலியல் புரோக்கரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, பாலியல்  புரோக்கர் ஜெயந்தியுடன் தலைமை காவலர் கூட்டு சேர்ந்து கோயம்பேடு பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்தது  தெரியவந்தது.

வாடிக்கையாளர்கள் உல்லாசமாக இருந்து விட்டு பணம் கொடுக்கவில்லை என்றால் தலைமை காவலரிடம் சொல்லி திருட்டு வழக்கில் விசாரணை என்ற  பெயரில் பணம் கொடுக்காத நபரை ஜெயந்தி அடித்து உதைத்து பணத்தை பறித்து வந்ததும் விசாரணையில் தெரியந்தது. இதுபோல் 10க்கும் மேற்பட்டோரிடம்  தலைமை காவலர் திருட்டு வழக்கு பதிவு செய்து பணத்தை பறித்து வந்துள்ளதாக இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட  வாலிபர்கள் வீட்டிற்கு பயந்து தலைமை காவலர் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து பாலியல் பெண் புரோக்கருடன் சேர்ந்து பாலியல் தொழில் நடத்திய சம்பவம் குறித்து தலைமை காவலரிடம் உயர் போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர். சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இளம்பெண்கள் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சட்டத்தை பாதுகாக்க வேண்டிய தலைமை காவலரே இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Tags : ladies ,sex worker ,
× RELATED 100 வயதை கடந்த 2 மூதாட்டிகளுக்கு கிராம...