×

ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் புகுந்ததால் மக்கள் போராட்டம் மறியலில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை

ராமநாதபுரம், நவ.23:  ராமநாதபுரம் அருகே  பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட விவேகானந்தர் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவேகானந்தர் நகர் செல்லும் சாலையில் ரயில்வே சுரங்கப் பாதை புதிதாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக போடப்பட்டுள்ள சுரங்கப் பாதைக்குள் தண்டவாளம் வரை மழைநீர் தேங்கியதால் சுரங்க பாதைக்குள் செல்ல முடியவில்லை.

மாற்று பாதை இல்லாததால் மாணவர்கள், பொதுமக்கள், நோயாளிகள், முதியவர்கள் அவதியடைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த பகுதியில் இருந்த மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து மின்தடை ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் இந்த சாலையில் அவசர காலத்திற்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர். கர்ப்பிணிகளை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வர மறுக்கின்றன. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் அக்.30, நவ.9 ஆகிய நாட்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேநிலை இருந்ததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை சுரங்க பாதையில் முன் போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்த போலீசார், அரசு அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
அப்பகுதியை சேர்ந்த கண்ணகி, முருகேசன் கூறுகையில், தண்ணீர் தேங்கி நிற்பது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் போராட்டம் செய்தோம். அதிகாரிகள் கலெக்டரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய அளவில் சாலை மறியல் செய்வோம் என்றனர்.

Tags : mass movement ,railway mining route ,
× RELATED ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர்...