×

ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை கவனிப்பவர்கள் தங்க ₹1 கோடியில் தங்கும்விடுதி மத்திய அரசின் நகர்புற வாழ்வாதார திட்டத்தில் அமைப்பு

நாகர்கோவில், நவ. 23: ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை கவனிப்பவர்கள் தங்க ரூ.1 கோடியில் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் இன்னும் சில நாட்களில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 700க்கும் மேற்பட்ட உள்நோயாகிகள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இங்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சைப்பெற்று செல்கின்றனர். மேலும் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து சிகிச்சைப்பெற்றுகின்றனர். உள்நோயாளிகளாக சிகிச்சைப்பெற்று வரும் பல நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து அவர்களை கவனித்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் நோயாளிகளின் அறைக்குள் அவர்களது உறவினர்களை அனுமதிப்பது இல்லை. இதனால் இரவு நேரங்களில் மருத்துவமனையின் வராண்டாவில் உறவினர்கள் தங்கி வந்தனர். இதனால் நோயாளிகளின் உறவினர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தொடர்ந்து நோயாளிகளுடன் இருந்து கவனிக்கும் அவர்களது உறவினர்களுக்கு மருத்துவமனையில் தங்கும் வசதி செய்துகொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

 இதனை தொடர்ந்து மத்திய அரசின் நகர்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் ₹1 கோடி மதிப்பில் நோயாளிகளை பார்க்கவருபர்களும், அவர்களை கவனிப்பவர்களும் தங்கும் வகையில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஆண், பெண்களுக்கு என தனித்தனியாக தங்கும் வகையில் அறைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 114 படுக்கை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. பணிகளை நகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமையில்  பொறியாளர் பாலசுப்பிரமணியன், பணிமேற்பார்வையாளர் ராஜா கவனித்து வருகின்றனர். இது குறித்து நகராட்சி ஆணையர் சரவணகுமார் கூறியதாவது: ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெறும் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் வகையில் மத்திய அரசின் நிதியில் நகராட்சி தங்கும் விடுதியை கட்டிவருகிறோம். இந்த கட்டிடம் திறப்பு விழா இந்த மாதம் இறுதிக்குள் இருக்கும்.
தங்கும் விடுதி திறந்தபிறகு, நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு எந்த வித சிரமமும் இருக்காது என்றார்.

Tags : caretaker ,hospital ,Aryabhallam Medical College Hospital ,
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி...