×

கோவில்பட்டியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

கோவில்பட்டி, நவ. 23:  கோவில்பட்டியில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு குறித்து  விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. கோவில்பட்டியில் நகராட்சி, ரோட்டரி சங்கம் மற்றும் பொது சுகாதாரத்துறை  சார்பில் அண்ணா பஸ்நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பன்றி  காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.  கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் அச்சையா தலைமை வகித்தார். ரோட்டரி சங்க  மாவட்ட துணை ஆளுநர் சம்பத்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர்  போஸ்கோராஜா  முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க தலைவர் பாபு  வரவேற்றார். கோவில்பட்டி நகர் முழுவதும் பன்றி காய்ச்சல், டெங்கு தடுப்பு  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா பஸ்நிலையத்தில் பயணிகள், வாகன  ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டு சோப்பு போட்டு  கைகளை சுத்தமாக கழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது. ரோட்டரி சங்க சுகாதார  பயிற்றுநர் முத்துமுருகன் கைகழுவும் பயிற்சியை அளித்தார். இதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டதோடு பஸ் நிலையம் மற்றும் பஸ்களில் கிருமிநாசினி  தெளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

 வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமமூர்த்தி பன்றி காய்ச்சல், டெங்கு  தடுப்பு விழிப்புணர்வு பற்றி பேசினார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கோவில்பட்டி ஆர்.டி.ஓ. விஜயா, விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கிவைத்தார். நகராட்சி பொறியாளர்  குருசாமி, நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், துணை இயக்குநரின் நேர்முக  உதவியாளர் மாரிமுத்து, நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்டென்லிகுமார்,  சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், வள்ளிராஜ், முருகன், திருப்பதி, ரோட்டரி  சங்க நிர்வாகிகள் ரவிமாணிக்கம், வீராச்சாமி, பத்மநாபன், பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

Tags : Dengue prevention awareness campaign ,Kovilpatti ,
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா